Marandahalli Map

Wednesday, July 1, 2009

தர்மபுரி, கிருஷ்ணகிரி வேட்பாளர்களுக்கு புது நெருக்கடி

தர்மபுரி, கிருஷ்ணகிரி வேட்பாளர்களுக்கு புது நெருக்கடி

ஏப்ரல் 21,2009,19:17 IST

தர்மபுரி : தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ரயில்வே ஸ்டேஷன்களை சேலம் ரயில்வே கோட்டத் தில் இணைக்க வேண்டும் எனக் கூறி, தேர்தல் நேரத்தில் ரயில்வே ஊழியர்கள் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர்.

கடந்த 2006ம் ஆண்டு டிசம்பரில் சேலம் ரயில்வே கோட்ட எல்லைகள் குறித்து ரயில்வே நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. ஊட்டி - கோவை வடக்கு ஜங்ஷன் (79 கி.மீ.,) கோவை வடக்கு - ஈரோடு - சேலம் - ஜோலார் பேட்டை (277 கி.மீ.,) இருகூர் - போத்தனூர் - கோவை ஜங்ஷன் (19 கி.மீ.,) போத்தனூர் - கிணத்துகடவு (19 கி.மீ.,) சேலம் - கரூர் (85 கி.மீ.,) கரூர் - திண்டுக்கல் (74 கி.மீ.,) சேலம் - விருத்தாசலம் (135 கி.மீ.,) சேலம் - மேட்டூர் (37 கி.மீ.,) ஈரோடு - திருச்சி (137 கி.மீ.,) ஆகியவை சேலம் கோட்டமாக நிர்ணயம் செய்யப்பட்டது. கர்நாடக மாநிலம் தென்மேற்கு ரயில்வே ஹுப்பள்ளி கோட்டத் துக்கு உட்பட்ட தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட ரயில்வே எல்லைகளும் சேலம் கோட்டத்தில் இணைக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், கோட்ட எல்லையில் தர்மபுரி மாவட்டத்தில் மொரப்பூர் ரயில்வே ஸ்டேஷன் மட்டும் இணைக்கப்பட்டதால், தர்மபுரி மாவட்டத் தில் உள்ள தொப்பூர், தர்மபுரி, பாலக்கோடு, மாரண்டஹள்ளி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ராயக் கோட்டை, ஓசூர் ரயில்வே ஊழியர்கள் கடும் அதிருப்தி அடைந்தனர்.

இது குறித்து அப்போதைய ரயில்வே இணை அமைச்சர் வேலு மற்றும் தர்மபுரி லோக்சபா தொகுதி பா.ம.க., எம்.பி., செந்தில் ஆகியோரிடம் கோரிக்கை வைத்தனர். அவர்களும் கோட்ட துவக்க விழாவுக்கு முன் எல்லை விரிவுபடுத்தப் படும் எனத் தெரிவித்தனர். சேலம் கோட்டம் 2007 நவ., 1ம் தேதி துவங்கப் பட்டது. ஆனால், தர்மபுரி, கிருஷ்ணகிரி ரயில்வே எல்லைகள் இன்று வரை கர்நாடக மாநிலம் தென் மேற்கு ரயில்வே ஹுப் பள்ளி ரயில்வே கோட்டத் துடன் உள்ளது. சேலம் கோட்டம் உதயமான போது, ஹுப்பள்ளி கோட்டத்தில் உள்ள தமிழகத்தைச் சேர்ந்தவர்களுக்கு இடமாற்றல் விருப்பத்தின் அடிப்படையில் மாற்றல் வழங்கப் பட்டது. தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட ரயில்வே எல்லைகளும் சேலம் கோட்டத் தில் இணைக்கப்படும் என்ற நம்பிக்கையில் பலர் தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ரயில்வே ஸ்டேஷன்களுக்கு மாறுதலாகி வந்தனர். ஆனால், ரயில்வே ஊழியர்களின் எதிர்பார்ப்பு இது வரையில் நிறைவேற்றப் படவில்லை.

இது குறித்து, 'சிட்டிங்' எம்.பி., செந்தில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு ரயில்வே ஊழியர்கள் மத்தியில் உள்ளது. தர்மபுரியில் இருந்து 620 கி.மீ., தூரத்தில் உள்ள ஹுப்பள்ளிக்கு பல்வேறு அலுவல் காரணங்களுக் காக ரயில்வே ஊழியர்கள் செல்ல வேண்டிய நிலை உள்ளது. அங்கு கன்னட மொழி தெரிந்தால் மட்டுமே தங்கள் கோரிக்கையை, அங்குள்ள ஊழியர்களுக்கு புரிய வைக்கும் நிலை உள்ளது. சேலம் கோட்டத்தோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ரயில்வே ஸ்டேஷன்களை இணைக்க வேண்டும் என, ரயில்வே ஊழியர்கள் தீவிரமாக குரல் கொடுத்து வருகின்றனர். இந்த கோரிக்கையை நிறைவேற்றித் தருவதாகக் கூறும் வேட்பாளர்களுக்கு மட்டுமே ரயில்வே ஊழியர்கள் ஓட்டளிக்க முடிவு செய்துள்ளனர்.