Marandahalli Map

Sunday, December 25, 2011

பெண்களை தாக்கிய இரு வாலிபர் கைது

பெண்களை தாக்கிய இரு வாலிபர் கைது
பதிவு செய்த நாள் : டிசம்பர் 02,2011,01:49 IST

பாலக்கோடு: பஞ்சப்பள்ளி அருகே, பெண்களை தாக்கிய, இரு வாலிபர்களை போலீஸார் கைது செய்தனர்.பஞ்சப்பள்ளி அடுத்த ஜலதிம்மனூர் கிராமத்தை சேர்ந்தவர் கங்காதேவி (29). இவரது உறவினர்கள் பாரதி (15), சின்னப்பன் (12). இவர்களை அதே பகுதியை சேர்ந்த காளேகவுண்டர் (27), சதீஷ் (27) ஆகியோர் திட்டி ரகளை செய்தனர்.இதை கங்காதேவி தட்டிக் கேட்டார். ஆத்திரமடைந்த காளேகவுண்டர் மற்றும் சதீஷ் ஆகியோர் சேர்ந்து கங்காதேவிதை அடித்து உதைத்தனர். இதை தடுக்க சென்ற கங்காதேவியின் அத்தை கதிரியம்மாளையும் தாக்கினர். காயமடைந்த இருவரும் பாலக்கோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டுள்ளனர்.
மாரண்டஹள்ளி போலீஸார் விசாரித்து, காளேகவுண்டர், சதீஷ் ஆகியோரை கைது செய்தனர்.

Friday, December 9, 2011

வாணியாறு, பஞ்சப்பள்ளி அணை நீர் திறப்பு

தர்மபுரி: பதிவு செய்த நாள் : டிசம்பர் 09,2011,01:44 IST
தர்மபுரி மாவட்டத்தில், சமீபத்தில் பெய்த மழையை தொடர்ந்து அணைகளில் நீர் மட்டம் உயர்வடைந்தது. இதையடுத்து, வாணியாறு மற்றும் பஞ்சப்பள்ளி அணையில் இருந்து, பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது.
தர்மபுரி மாவட்டத்தில், சமீபத்தில் பெய்த மழையை தொடர்ந்து, அணைகளில் நீர் மட்டம் உயர்வடைந்தது. இதை தொடர்ந்து, விவசாயிகள், அணைகளில் இருந்து பாசனத்துக்கு நீர் திறந்துவிட வேண்டும் என, பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு கோரிக்கை வைத்தனர். விவசாயிகளின் கோரிக்கை ஏற்ற அரசு, பாப்பிரெட்டிப்பட்டி தாலுகா, வாணியாறு அணை மற்றும் பாலக்கோடு தாலுகா பஞ்சப்பள்ளி சின்னாறு அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட உத்தரவிட்டது. இவ்விரு அணைகளில் இருந்து, தண்ணீரை உயர்கல்வி துறை அமைச்சர் பழனியப்பன், நேற்று முன்தினம் திறந்து வைத்தார். வாணியாறு அணையில் இருந்து இடது புற கால்வாய் வழியாக விநாடிக்கு, 45 கன அடி வீதமும், வலது புறக்கால்வாய் வழியாக விநாடிக்கு, 50 கன அடி தண்ணீரும் திறந்து விடப்பட்டுள்ளது. புதிய ஆயக்கட்டு பாசன பகுதிகளுக்கு இடது மற்றும் வலது புறக்கால்வாய்களில், ஒவ்வொரு கால்வாயிலும் இரு மண்டலங்களாக பிரித்து, ஒவ்வொரு மண்டலத்துக்கும், ஐந்து நாட்கள் வீதம், பத்து நாட்களுக்கு ஒரு நனைப்பு வீதம் மூன்று நனைப்பு (ஒவ்வொரு மண்டலத்துக்கும் ஒவ்வொரு நனைப்பு இடைவெளி 10 நாட்கள்) சுழற்சி முறையில் தண்ணீர் வழங்கவும், பழைய ஆயக்கட்டு பாசன பகுதிகளுக்கு அனைத்து ஐந்து ஏரிகளுக்கும் ஒரு முறை தண்ணீர் நிரப்பி தரவும் நேற்று முன்தினம் முதல், 45 நாட்கள் தண்ணீர் திறந்து விடப்படும். இதன் மூலம், மோளையானூர், கோழிமேக்கானூர், பாப்பிரெட்டிப்பட்டி, அதிகாரப்பட்டி, அலமேலுபுரம், தாதம்பட்டி, ஆலாபுரம், மருக்காலம்பட்டி, ஓந்தியாம்பட்டி, கவுண்டம்பட்டி, புதுப்பட்டி, வெங்கடசமுத்திரம், தேவராஜபாளையம், மெணசி, பூதநத்தம், தென்கரைக்கோட்டை, ஜம்மனஹள்ளி, பறையப்பட்டி, புதூர், நாச்சினம்பட்டி மற்றும் சின்னாங்குப்பம் ஆகிய கிராமங்களில் உள்ள, 10 ஆயிரத்து 517 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும். * பஞ்சப்பள்ளி சின்னாறு அணை: பாலக்கோடு தாலுகா, பஞ்சப்பள்ளி சின்னாறு அணையில் இருந்து, பழைய ஆயக்கட்டு நான்கு ஏரிகளுக்கு ஆற்றின் வழியாக நேற்று முன்தினம் முதல் ஒருமுறை நிரப்பவும், புதிய ஆயக்கட்டு பாசன பகுதிக்கு விநாடிக்கு, 35 கன அடி வீதம், 10 நாட்களுக்கு தண்ணீர் திறந்தும், 13 நாட்களுக்கு தண்ணீர் நிறுத்தியும், ஐந்து முறை முறை வைத்து தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இதன் மூலம், பஞ்சப்பள்ளி, பெரியானூர், போடிகுட்டப்பள்ளி, சாமனூர், அத்திமுட்லு, மாரண்டஹள்ளி, குஜ்ஜாரஅள்ளி, கொலசனஅள்ளி, பி.செட்டிஅள்ளி, ஜெர்த்தலாவ், பாலக்கோடு, எர்ரனஅள்ளி, பேளாரஅள்ளி ஆகிய கிராமங்களை சேர்ந்த, 3,198 ஏக்கர் பாசன வசதி பெறும். அணை நீர் திறக்கப்பட்டதை தொடர்ந்து, பாசன வசதி பெறும் கிராமங்களில், விவசாய பணிகளின் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். அணை நீர் திறப்பு நிகழ்ச்சியில், கலெக்டர் லில்லி, பாலக்கோடு எம்.எல்.ஏ., அன்பழகன், மாவட்ட பஞ்சாயத்து தலைவர் டி.ஆர்.அன்பழகன், யூனியன் சேர்மன்கள் முருகன், முனுசாமி, கருணாகரன், துணை தலைவர்கள் ராஜேந்திரன், நகராட்சி தலைவர் சுமதி, மாவட்ட கவுன்சிலர் குமுதா, சங்கர், மம்தா, ஆதி வெங்கடாசலம், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் ஜெகநாதன், உதவி பொறியாளர்கள் விஜயகுமார், சீதாபதி, ஒன்றிய கவுன்சிலர்கள் சந்திரன், வேலு, பஞ்சாயத்து தலைவர்கள் வஜ்ஜிரவேலு, வெங்கடாசலம், கிருஷ்ணமூர்த்தி, நித்யா உட்பட பலர் உடன் இருந்தனர்.

Sunday, November 20, 2011

புரட்டாசி மாதம் எதிரொலி: தக்காளி விலை உயர்வு

பதிவு செய்த நாள் : அக்டோபர் 20,2011,02:19 IST
ஈரோடு:புரட்டாசி மாதம் பிறப்பையொட்டி தக்காளி விற்பனை களைகட்டி உள்ளதால், விலை உயர்ந்துள்ளது.ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் இருந்தும் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஈரோடு நேதாஜி பெரிய மார்க்கெட்டுக்கு தக்காளி வரத்தாகிறது. தமிழக பகுதியில் தக்காளி வரத்து குறைந்துள்ள நிலையில், ஆந்திரா, கர்நாடகா பகுதியில் இருந்து தக்காளி வரத்து அதிகரித்துள்ளது.ஒரு மாதத்துக்கு முன் தக்காளி விளைச்சல் அதிகரிப்பால், வரத்தும் கணிசமாக உயர்ந்தது. மார்க்கெட்டில் தக்காளி விற்பனையின்றி தேக்கம் அடைந்தது. அப்போது, மூன்று கிலோ; 10 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.வெளிமாநிலங்களில் மழை காரணமாக தக்காளி வரத்தும் சற்று குறைந்துள்ளது. தவிர, தக்காளி பயன்பாடு அதிகரிப்பால், வரத்து குறைந்தும் விலை கிலோவுக்கு 10 ரூபாயாக உயர்ந்தது. தற்போது, புரட்டாசி மாதம் பிறப்பை யொட்டி அசைவ பிரியர்கள் அனைவரும், சைவத்துக்கு மாறியதால் காய்கறி விலையும் கட்டுப்பாடின்றி விலை உயர்ந்து வருகிறது.அதேபோல், தக்காளி விலையும் 10 ரூபாய்க்கு விற்றது, தற்போது, ஐந்து ரூபாய் உயர்ந்து 15 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

மேலும் புரட்டாசி மாதம் நீடிப்பால் விலை உயர வாய்ப்புள்ளதால், சைவப் பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். நீண்ட நாட்களுக்கு பின் தக்காளி விற்பனை சூடுபிடித்துள்ளதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தக்காளி வியாபாரி முருகன் கூறியதாவது:ஆந்திரா, கர்நாடகா, மாரண்டஹள்ளி உள்பட தமிழகத்தில் பல்வேறு பகுதியில் இருந்து ஈரோட்டுக்கு தக்காளி வரத்தாகிறது.
தினசரி 15 லோடு வரை நேதாஜி பெரிய மார்க்கெட்டுக்கு வரத்தாகிறது. தற்போது, புரட்டாசி மாதம் ஹிந்துக்கள் விரதம் இருந்து, சைவ உணவு மட்டுமே உண்பர். இதனால், 10 ரூபாய்க்கு விற்கப்பட்ட தக்காளி, 15 ரூபாய்க்கு விற்க்கப்படுகிறது. மேலும் விலை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.
அருமை
பிடிச்சுருக்கு
பரவாயில்லையே

வக்கீல்கள் கோர்ட் புறக்கணிப்பு

தர்மபுரி: பதிவு செய்த நாள் : ஜூன் 28,2011,23:41 IST
மாரண்டஹள்ளி போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுக்க சென்ற வக்கீலை தாக்கிய எஸ்.ஐ., மீது நடவடிக்கை எடுக்க கோரி தர்மபுரி, பாலக்கோடு, பென்னாகரம் நீதிமன்றங்களை வாக்கீல்கள் புறக்கணித்தனர். பாலக்கோடு அடுத்த சிக்க மாரண்டஹள்ளியை சேர்ந்தவர் ரவிசங்கர் (30). கடந்த 26ம் தேதி இரவு இவரது வீட்டில் மர்ம நபர்கள் புகுந்து 10 பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்றதாக, நேற்று முன்தினம் மாரண்டஹள்ளி போலீஸில் புகார் கொடுக்க சென்றபோது, ரவிசங்கரை எஸ்.ஐ.,தாக்கியதாகவும் அவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி தர்மபுரி மாவட்ட பார் கவுன்சில் சார்பில் எஸ்.பி., கணேசமூர்த்தியிடம் புகார் அளித்தனர். வக்கீலை தாக்கிய சம்பவத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று தர்மபுரி, பாலக்கோடு, பென்னாகரம் தாலுகாவில் உள்ள 11 உள் நீதிமன்றங்களில் பணிபுரியும் 500 வக்கீல்கள் நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்டனர். இதனால், நீதிமன்றத்தில் வழக்கமான பணிகள் பாதிக்கப்பட்டது. மேலும் இன்றும், நாளையும் நீதிமன்ற புறக்கணிக்க வக்கீல்கள் முடிவு செய்துள்ளனர்.
அருமை
பிடிச்சுருக்கு
பரவாயில்லையே

தாய் சாவு: பிணத்தை அடக்கம் செய்வதில் மகன்கள் மோதல்

மாரண்டஹள்ளி: பதிவு செய்த நாள் : நவம்பர் 07,2010,04:29 IST
மாரண்டஹள்ளி அருகே இறந்த தாயின் பிணத்தை எந்த மதத்தின் அடிப்டையில் இறுதி சடங்கு செய்வது என்பதில் மகன்களுக்கு இடையில் மோதல் ஏற்பட்டது. மாரண்டஹள்ளி அடுத்த சிக்கதோரணஅள்ளி பெட்டன் பகுதியை சேர்ந்தவர் ரோஜாவதி (65). இவருக்கு முனிராஜ், தேவன் (40), வேலன் (35) ஆகிய மகன்கள் உள்ளனர். ஹிந்து மதத்தை சேர்ந்த இவர்களில் தேவன் மட்டும் கிறிஸ்துவராக மதம் மாறினார். நேற்றிரவு ரோஜாவதி திடீரென இறந்துவிட்டார். தகவல் அறிந்த மகன்கள் தாயில் உடலை பார்த்து கதறி அழுதனர். பின்னர் உடல் அடக்கம் செய்வது குறித்து ஆலோசித்தனர். அப்போது, தேவன் கிறிஸ்தவ முறைப்பாடி இறுதி சடங்கு செய்ய வேண்டும் என வலியுறுத்தினார். இதற்கு மற்ற சகோதரர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். சிக்கதோரணபெட்டன் கிராமத்தில் தேவன் மட்டுமே கிறிஸ்தவர் என்பதால் ஹிந்து முறைப்படி சடங்கு செய்ய வேண்டும் என உறவினர்கள், ஊர்மக்களிடம் கூறினர்.

இந்த தகராறால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்த தாசில்தார் மணி, இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன், எஸ்.ஐ., பிரசன்னமூர்த்தி, வி.ஏ.ஓ., பொல்லியப்பன் ஆகியோர் நேற்று காலை ரோஜாவதி வீட்டுக்கு சென்று தேவனுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். "பெரும்பாலான மக்கள் ஹிந்து முறைப்படி சடங்கு செய்ய வேண்டும' என வலியுறுத்தியதால் அதன்படி செய்ய வேண்டும் என அதிகாரிகள் கூறனர். இதை தேவனும் ஏற்றுக்கொண்டார். அதையடுத்து, ஹிந்து முறைப்படி இறுதி சடங்கு செய்ய ஏற்பாடுகள் நடந்தது.


தேங்காய் உற்பத்தி பாதிப்பு: இளநீர் விலை இரட்டிப்பு

அருமை
பிடிச்சுருக்கு
பரவாயில்லையே
பதிவு செய்த நாள் : ஏப்ரல் 21,2011,01:26 IST

தர்மபுரி:

தர்மபுரி மாவட்டத்தில் தேங்காய் உற்பத்தி குறைந்துள்ளதால், தேங்காய் மற்றும் இளநீர் விலை இரு மடங்காக உயர்ந்துள்ளது.தமிழகத்தில் தேங்காய் உற்பத்தியில் முன்னணியில் உள்ள மாவட்டங்களில் தர்மபுரி மாவட்டமும் ஒன்று. மாவட்டத்தில் காரிமங்கலம், பாலக்கோடு, வெள்ளிசந்தை, மாரண்டஹள்ளி, அரூர், பாப்பிரெட்டிப்பட்டி ஆகிய பகுதியில் அதிக அளவில் தென்னை விவசாயம் நடந்து வருகிறது. குறிப்பாக, மாரண்டஹள்ளி, வெள்ளிச்சந்தை பகுதியில் உற்பத்தியாகும் தேங்காய் உருவத்தில் பெரிதாக இருக்கும். அந்த பகுதியில் உற்பத்தியாகும் தேங்காய்க்கு வெளி மாநிலங்களில் அதிக அளவில் வரவேற்பு உண்டு. ஆண்டுதோறும் கோடை கால விற்பனையை குறி வைத்து, தென்னை விவசாயிகள் காய்களை அறுடை செய்து விற்பனை செய்வர். கோடை காலத்தில், மஹாராஷ்டிரா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் இருந்து அதிக அளவில் வியாபாரிகள் தர்மபுரி மாவட்ட விவசாயிகளிடம் முன் கூட்டியே பணம் கொடுத்து இளநீருக்காக தேங்காய்களை அறுவடை செய்து, விற்பனைக்கு எடுத்து செல்வர். சில ஆண்டுகளாக தர்மபுரி மாவட்டத்தில் தென்னைகளில் ஈரியோஃபைட் நோய் தாக்குதல் அதிகரித்து இருந்தது. இந்நோய் தாக்கிய மரங்களில் தென்னை மட்டை மற்றும் காய்களில் உள்ள பசுமையான ஈரத்தன்மைகளை சிலந்தி பூச்சிகள் உறிஞ்சி விடுவதால், காய்ந்து சருகாகி மரங்கள் காட்சி அளிக்க துவங்கியது. இந்நோயை கட்டுப்படுத்த, 10 ஆண்டுக்கும் மேலாக விவசாயிகள் முயற்சித்த போதும், நோய் தாக்குதலை கட்டுப்படுத்த முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். வழக்கமாக கோடை கால இளநீர் விற்பனை மே, ஜுன் மாதத்தில் கூடுதலாக இருக்கும். தற்போது மார்ச் இறுதியிலிருந்து விற்பனை அதிகரித்துள்ளது. நோய் தாக்குதல், பருவ மழை தவறியதாலும், போதிய தண்ணீர் வசதியில்லாமல் தேங்காய் உற்பத்தி கடந்த காலங்களை விட, 40 முதல், 60 சதம் வரையில் வீழ்ச்சி அடைந்தது. கடந்த காலங்களில் ஒரு அறுவடை பருவத்தில் ஒரு மரத்தில், 40 முதல், 50 தேங்காய் அறுவடை நடக்கும். இந்தாண்டு, ஒரு மரத்துக்கு அதிக பட்சம், 10 தேங்காய்கள் கூட அறுவடைக்கு கிடைப்பது அரிதாகி போனது. முன் கூட்டியே கோடை கால இளநீர் விற்பனை துவங்கியதால், இளநீருக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டது. இளநீர் தேவைக்கு அதிக அளவில் காய்கள் அறுவடை செய்யப்பட்டதால், தேங்காய் தேவையை பூர்த்தி செய்ய முடியாமல் உள்ளூர் சந்தைகளில் தேங்காய்களுக்கும் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டது. கடந்த மாதம், இளநீருக்காக பல தோட்டங்களில் தேங்காய்கள் கூட அறுவடை செய்யப்பட்டு விற்பனைக்கு வரத்துவங்கியது. தர்மபுரியில் ஒரு இளநீர் 10 முதல் 15 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெயில் உக்கிரம் மற்றும் இளநீர் தட்டுப்பாடு காரணமாக இளநீர் விலை அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கடந்த காலத்தில் அதிக அளவில் வெளி மாநிலங்களுக்கு தேங்காய், இளநீர் விற்பனை செய்யப்பட்ட நிலையில் தற்போது, உள்ளூர் சந்தையில் ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு, விலை ஏற்றம் காரணமாக தென்னை விவசாயிகள் உள்ளூரில் விற்பனை செய்யத்துவங்கியுள்ளனர்.