தர்மபுரி:
தர்மபுரி மாவட்டத்தில் தேங்காய் உற்பத்தி குறைந்துள்ளதால், தேங்காய் மற்றும் இளநீர் விலை இரு மடங்காக உயர்ந்துள்ளது.தமிழகத்தில் தேங்காய் உற்பத்தியில் முன்னணியில் உள்ள மாவட்டங்களில் தர்மபுரி மாவட்டமும் ஒன்று. மாவட்டத்தில் காரிமங்கலம், பாலக்கோடு, வெள்ளிசந்தை, மாரண்டஹள்ளி, அரூர், பாப்பிரெட்டிப்பட்டி ஆகிய பகுதியில் அதிக அளவில் தென்னை விவசாயம் நடந்து வருகிறது. குறிப்பாக, மாரண்டஹள்ளி, வெள்ளிச்சந்தை பகுதியில் உற்பத்தியாகும் தேங்காய் உருவத்தில் பெரிதாக இருக்கும். அந்த பகுதியில் உற்பத்தியாகும் தேங்காய்க்கு வெளி மாநிலங்களில் அதிக அளவில் வரவேற்பு உண்டு. ஆண்டுதோறும் கோடை கால விற்பனையை குறி வைத்து, தென்னை விவசாயிகள் காய்களை அறுடை செய்து விற்பனை செய்வர். கோடை காலத்தில், மஹாராஷ்டிரா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் இருந்து அதிக அளவில் வியாபாரிகள் தர்மபுரி மாவட்ட விவசாயிகளிடம் முன் கூட்டியே பணம் கொடுத்து இளநீருக்காக தேங்காய்களை அறுவடை செய்து, விற்பனைக்கு எடுத்து செல்வர். சில ஆண்டுகளாக தர்மபுரி மாவட்டத்தில் தென்னைகளில் ஈரியோஃபைட் நோய் தாக்குதல் அதிகரித்து இருந்தது. இந்நோய் தாக்கிய மரங்களில் தென்னை மட்டை மற்றும் காய்களில் உள்ள பசுமையான ஈரத்தன்மைகளை சிலந்தி பூச்சிகள் உறிஞ்சி விடுவதால், காய்ந்து சருகாகி மரங்கள் காட்சி அளிக்க துவங்கியது. இந்நோயை கட்டுப்படுத்த, 10 ஆண்டுக்கும் மேலாக விவசாயிகள் முயற்சித்த போதும், நோய் தாக்குதலை கட்டுப்படுத்த முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். வழக்கமாக கோடை கால இளநீர் விற்பனை மே, ஜுன் மாதத்தில் கூடுதலாக இருக்கும். தற்போது மார்ச் இறுதியிலிருந்து விற்பனை அதிகரித்துள்ளது. நோய் தாக்குதல், பருவ மழை தவறியதாலும், போதிய தண்ணீர் வசதியில்லாமல் தேங்காய் உற்பத்தி கடந்த காலங்களை விட, 40 முதல், 60 சதம் வரையில் வீழ்ச்சி அடைந்தது. கடந்த காலங்களில் ஒரு அறுவடை பருவத்தில் ஒரு மரத்தில், 40 முதல், 50 தேங்காய் அறுவடை நடக்கும். இந்தாண்டு, ஒரு மரத்துக்கு அதிக பட்சம், 10 தேங்காய்கள் கூட அறுவடைக்கு கிடைப்பது அரிதாகி போனது. முன் கூட்டியே கோடை கால இளநீர் விற்பனை துவங்கியதால், இளநீருக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டது. இளநீர் தேவைக்கு அதிக அளவில் காய்கள் அறுவடை செய்யப்பட்டதால், தேங்காய் தேவையை பூர்த்தி செய்ய முடியாமல் உள்ளூர் சந்தைகளில் தேங்காய்களுக்கும் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டது. கடந்த மாதம், இளநீருக்காக பல தோட்டங்களில் தேங்காய்கள் கூட அறுவடை செய்யப்பட்டு விற்பனைக்கு வரத்துவங்கியது. தர்மபுரியில் ஒரு இளநீர் 10 முதல் 15 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெயில் உக்கிரம் மற்றும் இளநீர் தட்டுப்பாடு காரணமாக இளநீர் விலை அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கடந்த காலத்தில் அதிக அளவில் வெளி மாநிலங்களுக்கு தேங்காய், இளநீர் விற்பனை செய்யப்பட்ட நிலையில் தற்போது, உள்ளூர் சந்தையில் ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு, விலை ஏற்றம் காரணமாக தென்னை விவசாயிகள் உள்ளூரில் விற்பனை செய்யத்துவங்கியுள்ளனர்.
No comments:
Post a Comment