தர்மபுரி: மாரண்டஹள்ளியில் பூட்டிய வீட்டில் திருடிய வாலிபரை போலீஸார் கைது செய்தனர்.
மாரண்டஹள்ளி பகுதியை சேர்ந்தவர் திருமால் (42). இவர் கடந்த 23ம் தேதி குடும்பத்தினருடன் வெளியூர் சென்றார். மறு நாள் காலை வீட்டுக்கு வந்த போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. அதிர்ச்சி அடைந்த திருமால் வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது, வீட்டின் உள்ளே பீரோவில் இருந்த 22,500 ரூபாய் ரொக்க பணம், 2 பவுன் நகை உள்ளிட்ட பொருட்களை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரிந்தது. மாரண்டஅள்ளி போலீஸார் விசாரித்தனர்.
நேற்று காலை மாரண்டஹள்ளி நான்கு ரோடு பகுதியில் சுற்றிய வாலிபரை பிடித்து போலீஸார் விசாரித்தனர். அவர் முன்னுக்க பின் முரணான தகவல்களை கூறினார். சந்தேகமடைந்த போலீஸார் அவரிடம் தொடர் விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், அவர் மாரண்டஹள்ளி மின்வாரிய குடியிருப்பை சேர்ந்த சக்திவேல் (25) என்பதும், பல திருட்டு வழக்கில் தொடர்புடையவர் என்பது தெரியவந்தது. மேலும் திருமால் வீட்டில் திருடியதையும், சக்திவேல் ஒப்புக்கொண்டார். அவரை போலீஸார் கைது செய்து விசாரிக்கின்றனர்.