தர்மபுரி: தர்மபுரி அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐந்து பேர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயற்சி செய்தனர். இதில், மூதாட்டி சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக இறந்தார். தர்மபுரியை அடுத்த மாரண்டஅள்ளியை சேர்ந்தவர் முருகேசன்(38). இவர் தமிழ்நாடு மின்சாரவாரியத்தில் லைன் இன்ஸ்பெக்டராக வேலைபார்த்து வந்தார். இவரது மனைவி ரத்தினம்மாள்(38). இவர்களுக்கு மகள்கள் தங்கமணி(16), மேகலா(14), மகன் லோகேஷ்பாபு(4) ஆகியோர் உள்ளனர்.
இவர்களுடைய பாட்டி லோகம்மாள்(50). தங்கமணி பத்தாம் வகுப்பு தேர்வில் 400க்கு மேல் மதிப்பெண் பெறுவார் என குடும்பத்தில் உள்ளவர்கள் எதிர்பார்த்தனர். ஆனால், 250 மதிப்பெண் மட்டும் எடுத்து தேர்ச்சி பெற்றார். இதனால், அவரது பெற்றோர் கடும் அதிர்ச்சியடைந்தனர். தங்கமணியை பெற்றோர் திட்டியுள்ளார். நேற்று முருகேசன் வழக்கம்போல் காலையில் வேலைக்கு சென்றார். அவர் சென்றதும், தங்கமணியை மதிப்பெண் குறைவாக எடுத்ததாக கூறி அவரது தாய் ரத்தினம்மாள் திட்டினார்.
இதனால், அவர் வீட்டில் இருந்த விஷ பாட்டிலை எடுத்து குடித்து விட்டார். இதை சற்றும் எதிர்பாராத ரத்தினம்மா தானும் விஷத்தை எடுத்து குடித்து விட்டு குழந்தைகள் மேகலா, லோகேஷ்பாபு, பாட்டி லாகம்மாள் ஆகியோருக்கு விஷத்தை கொடுத்தார். விஷம் குடித்த அனைவரும் மயங்கி கிடந்தனர்.
உறவினர்கள் ஐந்து பேரையும் மீட்டு சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். இதில், பாட்டி லோகம்மாள் சிகிச்சை பலனளிக்காமல் இறந்தார். மற்ற நான்கு பேரும் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். மாரண்டஅள்ளி போலீஸார் விசாரிக்கின்றனர்.
No comments:
Post a Comment