Marandahalli Map

Wednesday, September 7, 2011

கஞ்சா கடத்திய வாலிபர் கைது

கஞ்சா கடத்திய வாலிபர் கைது
பதிவு செய்த நாள் : ஜூலை 20,2011,01:48 IST

  
ஓசூர்: ஓசூர் அருகே கஞ்சா கடத்திய வாலிபரை போலீஸார் கைது செய்தனர். ஓசூர் சிப்காட் எஸ்.ஐ., மோகன் மற்றும் போலீஸார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுப்பட்டனர். சிப்காட்டில் இருந்து பள்ளூர் செல்லும் பிரிவு சாலையில் சந்தேகத்துக்கு இடமாக கையில் பையுடன் நின்ற வாலிபரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில், அவர் மறைத்து வைத்திருந்த பையில் 10 கிலோ கஞ்சா இருப்பது தெரிந்தது. கஞ்சாவை பறிமுதல் செய்து, அவரை கைது செய்தனர். விசாரணையில், அவர் மாரண்டஅள்ளி புதுத்தெருவை சேர்ந்த தியாகராஜ் (31) என தெரிந்தது.

குப்பை கழிவுகள் சங்கமிக்கும் நதி : பாழாகும் பாலக்கோடு நீர் ஆதாரம்

குப்பை கழிவுகள் சங்கமிக்கும் நதி : பாழாகும் பாலக்கோடு நீர் ஆதாரம்
 
பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 24,2011,23:08 IST

  
தர்மபுரி: பாலக்கோடு நகரின் பாசனம் மற்றும் குடிநீருக்கு ஆதாரமாக விளங்கும் சனத்குமார் நதி குப்பை கழிவுகள் கொட்டப்படும் பகுதியாக மாறி நீரின் தன்மை மாசடையும் நிலை ஏற்பட்டுள்ளது.
தர்மபுரி மாவட்டத்தில் விவசாய தொழிலில் செழிப்புற்ற பகுதியாக பாலக்கோடு விளங்குகிறது. இப்பகுதியில் காவிரியின் துணை நதியான சின்னாறு மற்றும் சனத்குமார் நதிகள் மூலம் பாசனத்துக்கும், குடிநீர் ஆதாரத்துக்கும் ஆனி வேராக விளங்கி வருகிறது. சின்னாறு பஞ்சப்பள்ளி அணையின் உபரிநீர் பெருக்கெடுத்து ஓடிவரும் காலங்களில் சனத்குமார் நதியில் தண்ணீர் பெருக்கெடுக்கும். ஆண்டு முழுவதும் இந்த நதியில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதால், இப்பகுதியில் கரும்பு, நெல், வாழை, மஞ்சள் உள்ளிட்ட பயிர்களும் தேன்னையும் அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகிறது.
ஆற்றுப்படுகை பகுதி மட்டும் அல்லாமல் மேற்கு மலை தொடர்ச்சியின் அடிவாரப்பகுதியில் உள்ள பல்வேறு கிராம பகுதிகளிலும் நீர் ஆதாரங்கள் மூலம் பாசன வசதிகள் கிடைத்தால், பாலக்கோடு தாலுகா பகுதியில் எப்போதும் பசுமை படர்ந்த பூமியாக இருக்கும். இங்கு உற்பத்தி செய்யப்படும் காய்கறிகள், குறிப்பாக தக்காளி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு விற்பனைக்கு செல்வது குறிப்பிட தக்கது. காய்கறி பயிர்களை போல் தோட்டப்பயிர்களும் அதிக அளவில் விவசாயிகளுக்கு லாபத்து கொடுத்து வருகிறது.
சமீப காலமாக இப்பகுதி விவசாயிகள் மலர் சாகுபடியில் இறங்கி நல்ல லாபம் அடைந்து வருகின்றனர். பாலக்கோடு பகுதியில் ஆற்றுப்படுகை பகுதிகள் இருந்தாலும் விவசாய பாசனத்துக்கு தேவையான நீர் நிர்வாகம் முழுமையாக இருந்தாதல் கடந்த காலங்களில் விவசாயம் சொழிப்புற்றுள்ளது. பஞ்சப்பள்ளி சின்னாறு அணை கால்வாய் மூலம் வரும் தண்ணீர் ஜெர்தலாவ் ஏரியில் தேக்கப்பட்டு, அதன் கோடி நீர் பாலக்கோடு சனத்குமார் நதியின் வழியாக சென்று தாமரை ஏரியும், தும்பல அள்ளி அணைக்கும் நீர் செல்கிறது. தும்பல அள்ளி அணையில் இருந்து உபரி நீர் கம்பைநல்லூர் சென்று அங்கிருந்து தென்பெண்ணையாற்றில் கலக்கிறது.
சனத்குமார் நதியில் பாலக்கோடு நகர மக்கள் பொதுமக்கள் குளிக்கவும், துணிகள் துவைக்கவும் பயன்படுத்தி வருகின்றனர். இந்த நதி செல்லும் மாரண்டஅள்ளி சாலையில் போக்குவரத்து பாலம் கட்டப்பட்டுள்ளது. இந்த பகுதியில் நகரின் பல்வேறு இறைச்சி கடைகளில் இருந்து கழிவுகளை நதியில் கொட்டுவதும், கட்டிட கழிவுகளை கொட்டி நதியின் நீர் தன்மையை மாசுப்படுத்தி வருகின்றனர்.
அதே போல் இந்த நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள தடுப்பணை பகுதியையொட்டியுள்ள மயான பகுதியில் நகரில் சேரும் குப்பை கழிவுகள் அனைத்தும் கொட்டப்பட்டு நதி படுகை பகுதி முழுவதும் துர் நாற்றம் அடித்து வருகிறது. இதில், என்ன வேடிக்கை என்றால் மாசுப்பட்ட இந்த நீரில் மக்கள் குளிப்பதும், துணி துவைப்பதும் தொடர்ந்து நடந்து வருகிறது.
மக்களின் நீர் ஆதாரப்பகுதியில் குப்பைகள் கொட்டுவதை தடுப்பதோடு, நீர் வழிப்பாதையில் உள்ள செடி ஆக்கிரமிப்புகளை அகற்ற பொதுப்பணித்துறை மற்றும் உள்ளாட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வர்த்தக நிறுவனம், கூட்டுறவு வங்கிகளில் திருடிய இரு வாலிபர்கள் அதிரடி கைது

வர்த்தக நிறுவனம், கூட்டுறவு வங்கிகளில் திருடிய இரு வாலிபர்கள் அதிரடி கைது
 
பதிவு செய்த நாள் : ஜூலை 15,2011,23:12 IST

  
பாலக்கோடு: பாலக்கோடு, மாரண்டஅள்ளி பகுதியில் உள்ள வர்த்தக நிறுவனங்கள் நிதி நிறுவனங்கள், நகர கூட்டுறவு வங்கி உள்ளிட்ட பல இடங்களில் திருடிய இரு வாலிபர்களை போலீஸார் கைது செய்தனர். திம்மம்பட்டியை சேர்ந்த சங்கர் என்பவர் நேற்று முன்தினம் பாலக்கோட்டுக்கு வந்து கொண்டிருந்தார். அப்போது அவரை வழி மறித்த ஒரு வாலிபர் கத்தியை காட்டி மிரட்டி 160 ரூபாயை பறித்து சென்றார். இது குறித்து பாலக்கோடு போலீஸில் சங்கர் புகார் செய்தார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த சங்கர் கூறிய அடையாளத்தை வைத்து ஒரு வாலிபரை கைது செய்தனர். விசாரணையில், அவர் பாலக்கோடு சாணார் தெரு பகுதியை சேர்ந்த கார்த்திக் (23) என்பது தெரிந்தது. சிறு வயதில் தாயாரை இழந்த கார்த்திக்கு, தொடர்ந்து பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வந்தார். இவரிடம் தனிப்படை போலீஸார் விசாரித்தனர்.

கடந்த 2008ம் ஆண்டு ஒரு ஜவுளிக்கடையில் திருடிய கார்த்திக்கை போலீஸார் கைது செய்தனர். மூன்றாண்டு சிறையில் இருந்த அவர் சில மாதங்களுக்கு முன்பு வெளியே வந்தார். பின்னர் கார்த்திக்கும், அவரது நண்பர் ஆறுமுகம் என்பவரும் சேர்ந்து பல்வேறு திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டனர். கடந்த பிப்ரவரி 20ம் தேதி பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள வணிக வளாகத்தில் நள்ளிரவில் புகுந்த இவர்கள் அங்குள்ள ரத்த பரிசோதனை நிலையம், இரு நிதி நிறுனவனங்களில் கதவுகளை உடைத்து 61,300 ரூபாயை திருடியுள்ளனர். கடந்த ஏப்ரல் 17ம் தேதி பாலக்கோடு நகர கூட்டுறவு வங்கியின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த 39,828 ரூபாய் திருடியுள்ளனர். இதே போல் பல இடங்களில் அவர்கள் திருடியது தெரிந்தது. கார்த்திக் கொடுத்த தகவல் அடிப்படையில் பாலக்கோடு ரயில்வே ஸ்டேஷனில் சுற்றித்திரிந்த ஆறுமுகத்தையும் போலீஸார் கைது செய்தனர். இவர்களிடம் இருந்து 29,160 ரூபாயை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

அரசு மகளிர் பள்ளி மாணவிகள் சாதனை

அரசு மகளிர் பள்ளி மாணவிகள் சாதனை
 
பதிவு செய்த நாள் : ஜூன் 05,2011,01:34 IST

  
தர்மபுரி: தர்மபுரி மாவட்டம் மாரண்ட அள்ளி அரசு பள்ளி மாணவிகள் எஸ்.எஸ்.எல்.ஸி., தேர்வில், 90 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.மாரண்ட அள்ளி அரசு மேல்நிலைப்பள்ளியில் எஸ்.எஸ்.எல்.ஸி., தேர்வில், 90 சதவீதம் மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவி கனிமொழி, 480 மதிப்பெண் எடுத்து பள்ளியில் முதலிடம் பிடித்தார். விஜயலட்சுமி, 476 மதிப்பெண் பெற்று இரண்டாவது இடமும், நவீனா என்ற மாணவி, 474 மதிப்பெண் பெற்று மூன்றாவது இடமும், பவித்ரா, உமா ஆகிய மாணவிகள், 473 மதிப்பெண்கள் பெற்று நான்காவது இடமும் பிடித்தனர்.சாதனை படைத்த மாணவிகளுக்கு தலைமை ஆசிரியர் வரதராஜன், உதவி தலைமை ஆசிரியர் ஜெயசீலன், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் தங்கசரவணன் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தனர்.

தண்டவாளத்தில் சேதம்



[X]
தர்மபுரி அருகே பரபரப்பு: தண்டவாளத்தில் சேதம்: பயணிகள் ரெயில் தப்பியது; நாசவேலையா? விசாரணை
emailதர்மபுரி அருகே பரபரப்பு:
 
 தண்டவாளத்தில் சேதம்:
 
 பயணிகள் ரெயில் தப்பியது;
 
 நாசவேலையா? விசாரணை
தர்மபுரி, ஆக. 20-
 
சேலம்-யஷ்வந்த்பூர் ரெயில் மார்க்கத்தில் தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அருகே தண்டவாளத்தையொட்டி பகுதியில் மேம்பாலம் கட்டப்பட்டு வருகிறது. இதனால் அந்த பகுதியில் வரும் அனைத்து ரெயில்களும் மெதுவாக சென்று வந்தது. இதே போல் நேற்று மாலையும் யஷ்வந்த்பூர்-சேலம் பயணிகள் ரெயில் மாரண்ட அள்ளி ரெயில் நிலையம் அருகே வந்து கொண்டிருந்தது. அப்போது ஒரு இடத்தில் தண்டவாளம் வளைந்து இருப்பது தெரியவந்தது.
 
இதைப்பார்த்த ரெயில் என்ஜின் டிரைவர் திடீர் பிரேக் போட்டு நிறுத்தினார். பின்னர் இதுகுறித்து ரெயில்வே அதிகாரிகளுக்கும், போலீசுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
 
இதையடுத்து அந்த பக்கமாக வந்த அனைத்து ரெயில்களும் வேறு வழியாக திருப்பி விடப்பட்டது. பின்னர் அதிகாரிகள் வந்து பார்த்த போது தண்டவாளம் அடியில் பெயர்க்க முயன்றது போல வளைந்து காணப்பட்டது தெரியவந்தது.
 
இதையடுத்து அவை சரிசெய்யப்பட்டு 30 நிமிடத்துக்கு பின்னர் மெதுவாக அந்த பகுதியில் ரெயில் இயக்கப்பட்டது. சரியான நேரத்தில் கண்டுபிடிக்கப்பட்டதால் பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது. ரெயிலை கவிழக்க யாராவது சதி செய்தார்களா? என்று விசாரணை நடத்தப்பட்டது.   மேலும் என்ஜின் டிரைவர் ரெயில் தாமதத்துக்கான காரணத்தை அதிகாரிகளிடம் எழுதி வாங்கி சென்றார். இதனால் 9-30 மணிக்கு சேலம் ரெயில் நிலையத்துக்கு வரவேண்டிய யஷ்வந்த்பூர் பயணிகள் ரெயில் தாமதமாக வந்து சேர்ந்தது.
 
விசாரணையில் தண்டவாளத்தையொட்டி பாலம் கட்டும் பணி நடந்து வருவதால் பொக்லின் மோதி தண்டவாளம் வளைந்து இருப்பது தெரியவந்தது.