குப்பை கழிவுகள் சங்கமிக்கும் நதி : பாழாகும் பாலக்கோடு நீர் ஆதாரம்
பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 24,2011,23:08 IST
தர்மபுரி மாவட்டத்தில் விவசாய தொழிலில் செழிப்புற்ற பகுதியாக பாலக்கோடு விளங்குகிறது. இப்பகுதியில் காவிரியின் துணை நதியான சின்னாறு மற்றும் சனத்குமார் நதிகள் மூலம் பாசனத்துக்கும், குடிநீர் ஆதாரத்துக்கும் ஆனி வேராக விளங்கி வருகிறது. சின்னாறு பஞ்சப்பள்ளி அணையின் உபரிநீர் பெருக்கெடுத்து ஓடிவரும் காலங்களில் சனத்குமார் நதியில் தண்ணீர் பெருக்கெடுக்கும். ஆண்டு முழுவதும் இந்த நதியில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதால், இப்பகுதியில் கரும்பு, நெல், வாழை, மஞ்சள் உள்ளிட்ட பயிர்களும் தேன்னையும் அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகிறது.
ஆற்றுப்படுகை பகுதி மட்டும் அல்லாமல் மேற்கு மலை தொடர்ச்சியின் அடிவாரப்பகுதியில் உள்ள பல்வேறு கிராம பகுதிகளிலும் நீர் ஆதாரங்கள் மூலம் பாசன வசதிகள் கிடைத்தால், பாலக்கோடு தாலுகா பகுதியில் எப்போதும் பசுமை படர்ந்த பூமியாக இருக்கும். இங்கு உற்பத்தி செய்யப்படும் காய்கறிகள், குறிப்பாக தக்காளி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு விற்பனைக்கு செல்வது குறிப்பிட தக்கது. காய்கறி பயிர்களை போல் தோட்டப்பயிர்களும் அதிக அளவில் விவசாயிகளுக்கு லாபத்து கொடுத்து வருகிறது.
சமீப காலமாக இப்பகுதி விவசாயிகள் மலர் சாகுபடியில் இறங்கி நல்ல லாபம் அடைந்து வருகின்றனர். பாலக்கோடு பகுதியில் ஆற்றுப்படுகை பகுதிகள் இருந்தாலும் விவசாய பாசனத்துக்கு தேவையான நீர் நிர்வாகம் முழுமையாக இருந்தாதல் கடந்த காலங்களில் விவசாயம் சொழிப்புற்றுள்ளது. பஞ்சப்பள்ளி சின்னாறு அணை கால்வாய் மூலம் வரும் தண்ணீர் ஜெர்தலாவ் ஏரியில் தேக்கப்பட்டு, அதன் கோடி நீர் பாலக்கோடு சனத்குமார் நதியின் வழியாக சென்று தாமரை ஏரியும், தும்பல அள்ளி அணைக்கும் நீர் செல்கிறது. தும்பல அள்ளி அணையில் இருந்து உபரி நீர் கம்பைநல்லூர் சென்று அங்கிருந்து தென்பெண்ணையாற்றில் கலக்கிறது.
சனத்குமார் நதியில் பாலக்கோடு நகர மக்கள் பொதுமக்கள் குளிக்கவும், துணிகள் துவைக்கவும் பயன்படுத்தி வருகின்றனர். இந்த நதி செல்லும் மாரண்டஅள்ளி சாலையில் போக்குவரத்து பாலம் கட்டப்பட்டுள்ளது. இந்த பகுதியில் நகரின் பல்வேறு இறைச்சி கடைகளில் இருந்து கழிவுகளை நதியில் கொட்டுவதும், கட்டிட கழிவுகளை கொட்டி நதியின் நீர் தன்மையை மாசுப்படுத்தி வருகின்றனர்.
அதே போல் இந்த நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள தடுப்பணை பகுதியையொட்டியுள்ள மயான பகுதியில் நகரில் சேரும் குப்பை கழிவுகள் அனைத்தும் கொட்டப்பட்டு நதி படுகை பகுதி முழுவதும் துர் நாற்றம் அடித்து வருகிறது. இதில், என்ன வேடிக்கை என்றால் மாசுப்பட்ட இந்த நீரில் மக்கள் குளிப்பதும், துணி துவைப்பதும் தொடர்ந்து நடந்து வருகிறது.
மக்களின் நீர் ஆதாரப்பகுதியில் குப்பைகள் கொட்டுவதை தடுப்பதோடு, நீர் வழிப்பாதையில் உள்ள செடி ஆக்கிரமிப்புகளை அகற்ற பொதுப்பணித்துறை மற்றும் உள்ளாட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.