சங்க காலத்தில் தர்மபுரியின் பெயர் தகடூர். இவ்வூரை அதியமான் ஆண்டதாக இலக்கியம் கூறுகிறது. பிற்காலத்தில் சேரமன்னன் பெருஞ்சேரல் இரும்பொறையால் அதியமான் மகன் எழினி தோற்கடிக்கப்பட்டான். இதனை 'தகடூர் யாத்திரை' என்ற தமிழிலக்கியம் விரிவாக விளக்குகிறது. சேரரின் ஆட்சிக்குப் பிறகு தர்மபுரி என வழங்கும் தகடூர், நுளம்பர், சோழர், மீண்டும் அதியமான்கள், ஹொய்சாளர், விஜய நகர மன்னர்கள் ஆட்சியில் இருந்தது. 17-ஆம் நூற்றாண்டில் பிஜப்பூர் சுல்தான்களின் ஆளுகையின் கீழ் தருமபுரி இந்தது. 1652 முதல் 1768 வரை மைசூர் மன்னர்களின் மேலாண்மையின் கீழ் இருந்தது. இக்காலத்தில் கன்னடர்கள் பெருமளவில் இம்மாவட்டத்தில் குடியேறினர். இவர்களுக்கு முன்பே விஜயநகர காலத்தில் தெலுங்கர்கள் மாவட்டம் முழுவதும் பரவி வாழ்ந்து வருகின்றனர். 18-ஆம் நூற்றாண்டின் மத்தியில் ஆங்கிலத் தளபதி வுட் என்பவன் பிரிட்டீஸ் இந்தியப் பகுதிக்குள் தர்மபுரியை கொண்டு வந்தான். வெள்ளையர் ஆட்சிக் காலத்தில் சேலம் மாவட்டத்துடன் தர்மபுரி இணைந்தே இருந்தது. 1965-ஆம் ஆண்டு சேலம் மாவட்டத்தை இரண்டாகப் பிரித்து தர்மபுரி மாவட்டம் உருவாக்கப்பட்டது. இம்மாவட்டம் தமிழகத்தின் எல்லையில் இருப்பதால் கன்னட, தெலுங்கு செல்வாக்கு உண்டு. ஊர்களும் ஹல்லி, பள்ளி என்று அமைந்திருக்கும். இங்கு பழங்குடியினரும் அதிகம். மழையளவு சராசரி : 857மி.மீ; காடுகள் : 3,66,231; ஹெக்டேர் சாலைகளின் நீளம் : 5,796கி.மீ; காவல் நிலையங்கள் : 52; பதிவுபெற்ற வாகனங்கள் : 18,640; திரையரங்குகள் : 142; வெப்பம் : 38நீ எல்லைகள் : இம்மாவட்டத்தின் கிழக்கே வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்களும்; மேற்கே கர்நாடக மாநிலத்தின் பெங்களூர், மைசூர் மாவட்டங்களும்; வடபகுதியில் கர்நாடகமாநிலம் மற்றும் ஆந்திரத்தின் சித்தூர் மாவட்டமும்; தென் பகுதியில் சேலம் மாவட்டமும் எல்லைகளாக அமைந்துள்ளன. உள்ளாட்சி நிறுவனங்கள் : நகராட்சிகள்-3; ஊராட்சி ஒன்றியம்-18; பேரூராட்சிகள்-17; கிராம பஞ்சாயத்துக்கள்-588; சட்ட சபை தொகுதிகள்: 10; ஓசூர், தளி, காவேரிப்பட்டினம், கிருஷ்ணகிரி, பர்கூர், அரூர், மொரப்பூர், பாலக்கோடு, தர்மபுரி, பென்னாகரம். பாராளுமன்ற தொகுதிகள்: 2. தர்மபுரி, கிருஷ்ணகிரி. பள்ளிகள்: தொடக்கநிலை 1,837 - நடுநிலை 173 - உயர்நிலை 149 - மேல்நிலை 56 - கல்லூரிகள் 3 - பொறியியல் கல்லூரி 1 மருத்துவம் : அரசு மருத்துவமனைகள்-7; ஆரம்ப சுகாதாரமையங்கள்-18; துணைமையங்கள்-62. புகழ்பெற்ற பெரியோர் : சங்ககால மன்னர் அதியமான், புலவர் ஒளவையார், சுதந்திர போராட்டவீரர் தீர்த்த கிரிகவுண்டர்; கவனர் ஜென்ரல் ராஜாஜி; விடுதலை வீரர் சுப்பிரமணிய சிவா. ஆறுகள் : காவிரி, தென்பெண்ணை, தொப்பையாறு, வன்னியாறு, மார்க்கண்ட நதி, தோப்பூர் ஆறு, சனத்குமாரநதி, கம்பையநல்லூர் ஆறு, பாம்பாறு முதலியவை. இவ்வாறுகளால் மாவட்டத்தில் விவசாயம் சிறப் பாக செயல்பட்டு வருகிறது. ஏரிகள் : மழையளவு குறைவாக உள்ள மாவட்டம். காவிரி தவிர மற்ற நதிகளால் அதிக பயன் இல்லை. அதனால் ஏரியை நம்ப வேண்டிய அவசியம் உள்ளது. இங்கு கிருஷ்ணகிரி, ஓசூர், தர்மபுரி வட்டங்களில் அதிகமாக ஏரிகள் உள்ளன. அணைகள் : ஓசூர் வட்டத்தில் அஞ்செட்டிக்கருகில் சனத்குமார நதியில் அணைகட்டப்பட்டுள்ளது. தர்மபுரி வட்டத்தில் மாரண்டஹள்ளி அணைக்கட்டு பெரியதாக விளங்குகிறது. சின்னாறு நீர்த்தேக்கம் 1958-ஆம் ஆண்டு கட்டப்பட்டது. இதனால் 2600 ஏக்கர் நிலம் பயனடைகிறது. மொத்த விவசாயப் பரப்பு : 4.68 ஹெக்டேர். இதில் நெல், இஞ்சி, கொள்ளு, உளுந்து, பட்டாணி, முட்டைகோஸ், பச்சைப் பயறு, துவரை, அவரை, காலிபிளவர், காராமணி, மொச்சை, சோளம், கேழ்வரகு, கம்பு, பருத்தி, நிலக்கடலை, சூரியகாந்தி, கரும்பு, வெங்காயம், உருளைக்கிழங்கு, ஆமணக்கு, கடுகு மற்றும் மஞ்சள் விளைவிக்கப் படுகிறது. தர்மபுரி மாவட்டம் மலர் உற்பத்தில் மூன்றாம் இடம் வகிக்கிறது. ஆண்டுக்கு 3385 மெ.டன் மலர்கள் உற்பத்தி ஆகின்றன. நெல் : தர்மபுரி, ஓசூர், கிருஷ்ணகிரி வட்டங்களில் நெல்விளைகிறது. சோளம் : அரூரில் சோளம் அதிகமாக விளைவிக்கப்படுகிறது. பெரிய மஞ்சள், செஞ்சோளம், தலைவிரிச்சான் சோளம் என்ற மூன்று இனங்கள் இங்கு பயிராகின்றன. கேழ்வரகு : நெல்லுக்கு அடுத்தபடியாக கேழ்வரகு ஓசூர், தாலி, பாரகோல் பகுதியில் விளைகிறது. இங்கு இ.சி. 593 ரகம் விளைகிறது. இதனுடன், கம்பு, சாமை, தினை, வரகும் விளைகிறது. பருத்தி : கம்போடியா பருத்தி தர்மபுரிவட்டத்தில் விளைகிறது. கொள்ளு : ஓசூர்-அரூர் வட்டங்கள் அதிக மகசூல் நடைபெறுகிறது. துவரை : கிருஷ்ணகிரி வட்டத்தில் கேழ்வரகோடு சேர்த்தும், அரூர் வட்டத்தில் எள்ளுடனும் துவரை விளைவிக்கப்படுகிறது. உளுந்து : அரூர் வட்டத்திலும், கிருஷ்ணகிரி வட்டத்திலும் பச்சைப்பயறு, உளுந்து, கடலை விளைகிறது. எள் : ஓசூர், தருமபுரி, கிருஷ்ணகிரி. இப்பகுதிகளில் கொட்டை முத்துவும் விளைவிக்கப்பட்டு விளக்கெண்ணை எடுக்கப்படுகிறது. புகையிலை : அரூர் வட்டம். ஏலம், கிராம்பு, மிளகு, புளி :கிருஷ்ணகிரியில் விளைகிறது. இது தவிர தர்மபுரி, அரூர் பகுதிகளில் மல்லி விளைவிக்கப்படுகிறது. ஓசூரில் வாழை பயிரிடப்படுகிறது. கால்நடைவளம் : தர்மபுரி கால்நடை வளம் நிரம்பப்பெற்றது. இங்கு ஆடு, மாடு, கோழி, பண்ணைகள் பரந்து காணப்படுகின்றன. மேச்சேரி அல்லது மைலம்பாடி வகை ஆடுகளிலிருந்து 60 பவுண்டு ரோமம் ஆண்டுக்கு எடுக்கப் படுகிறது. மந்தியா வகை ஆடுகள் ஓசூரில் வளர்க்கப்படுகின்றன. ஓசூர் பண்ணை : 1925 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இங்கு பெல்லாரி, பிக்கானீர், மந்தியாவகை ஆடுகள் வளர்க்கப்பட்டு கம்பளிக்காக ரோமம் எடுக்கப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக கோழிப்பண்ணை அமைந்துள்ளது. இங்கு வொயிட் லெக்கார்ன், ரோட் ஐலண்டு, ரெட் வகைகள் வளர்க்கப்படுகின்றன. இதன் கிளை கிருஷ்ணகிரி நீர்த்தேக்கத்திட்ட வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ளது. ஓசூர் கால்நடைப்பண்ணை : 1924-ஆம் ஆண்டு ஓசூர் வட்டத்திலுள்ள மதிகிரி கிராமத்தில் தொடங்கப்பட்டது. இவ்விடம், 3000 அடி உயரத்தில் அமைந்துள்ளது. இங்குப் புல் ஏராளமாகக் கிடைக்கிறது. இப்பண்ணை சுமார் 1674 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளது. இங்கு சிந்தி, கிர், ஹல்லி கார், காங்கேயம் முதலிய இனங்கள் வளர்க்கப்படுகின்றன. பட்டுப் பூச்சி வளர்ப்பு : மத்தகிரியிலேயே பட்டுப்பூச்சி வளர்க்கும் தொழில் நன்கு வளர்ந்துள்ளது. இப்பகுதியின் தட்ப வெப்ப நிலையே இதற்கு காரணமாக அமைந்துள்ளது. 1944-ஆம் ஆண்டு ஹோப்பட்டு நூல் பணி சுமார் 100 ஏக்கர் நிலத்தில் ஏற்படுத்தப்பட்டது. இதில் ஏழு மல்பெர்ரி மரத்தோட்டங்கள் அமைக்கப்பட்டு, உயர்ந்தரகப்பட்டுப் பூச்சிகள் வளர்க்கப்பட்டன. 1950-51 இல் மூன்று மங்கு வளர்ச்சியை இத்திட்டம் எட்டிப்பிடித்தது. ஓசூர் வட்டத்தில் தாளவாடி கிராமத்தில் சுமார் 1820 ஏக்கர் நிலப்பரப்பில் பட்டுப்பூச்சி வளர்க்கும் திட்டம் மேற்கொள்ளப்பட்டது. பட்டுப்பூச்சி வளர்ப்பை ஒரு பாடமாக இங்குள்ள மாணவர்களுக்குக் கற்றுத் தருவதற்காக ராயக் கோட்டை மேல்நிலைப் பள்ளியில் பயிற்சி தரப்படுகிறது. பேரிகை என்னும் ஊரில் மாதிரிப் பண்ணை ஒன்றை உருவாக்கி மக்களுக்குப் பட்டுப்பூச்சி வளர்க்கும் செயல்முறை திட்டங்கள் விளக்கப் படுகின்றன. தென்கனிக் கோட்டையில் பட்டு நூல் சேகரிக்கும் மையம் ஒன்று செயல்படுகிறது. மல்பெர்ரி மரம் வைத்திருக்கும் விவசாயிகளுக்கு பட்டுப் புழுக்கள் ஓசூர் நிலையத்தாரால் வழங்கப்படுகின்றன. முட்டைகள் பரிசோதிக்கப்பட்டு கொடுக்கப் படுகின்றன. இம்மாவட்டத்தில் பட்டுப்பூச்சி வளர்ப்பு சிறந்ததொழிலாக பெருகி வருகிறது. நிலவளம் : தர்மபுரி மாவட்டம் ஓர் மலைமாவட்டம் ஆகும். தர்மபுரியின் வடக்குப் பகுதி மைசூர் பீடபூமியும், கிழக்கில் ஜாவடி மலைத்தொடர்களும், தெற்கில் சித்தேரி, சேர்வராயன் மலைத்தொடர்களும் வளைத்து நிற்கிறது. தர்மபுரியின் நிலவியல் பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முற்பட்டதால் இங்கு கனிம வளம் நிறைந்துள்ளது. அபாடைட் : அபாடைட் கனிமம், சாமல்பட்டிக்கு அருகில் உள்ள ரெட்டிப்பட்டியிலும் ஓகனக்கல் பக்கத்தில் உள்ள ஊத்தாமலைப்பகுதியிலும் கிடைக்கின்றது. ஓகனக்கல் பகுதியில் 50,000 டன்னும், ஊத்தாமலையில் 3கி.மீ. தொலைவுக்கும், கெம்பகரைக்குத் தெற்கில் 2 கி.மீ. தொலைவுக்கும் இருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. பித்தளை : பித்தளை தாது அரூர் வட்டத்தில் பைர நாயக்கன் பட்டியில் கிடைக்கிறது. இது தவிர ஈயம், சைனைட், கார்பனேட்டுகளும் கிடைக்கும் வாய்ப்பு உள்ளதாகத் தெரிகிறது. தங்கம் : மகாராஜாக்கடை அருகில் உள்ள நாராபள்ளியில் கிடைக்க வாய்ப்பு இருப்பதாக ஆய்வு கூறுகிறது. இரும்பு : தீர்த்தாமலையில் மட்ட இரும்பு சுமார் 28 மில்லியன் டன் கிடைக்கும் சாத்தியம் இருக்கிறது. சுண்ணாம்பு : தர்மபுரிமாவட்டத்தில் கும்மனுர் பகுதியில் சுமார் 7 இலட்சம் டன்னும், திப்பம்பட்டியில் சுமார் 50,000 டன்னும் கிடைக்க வாய்ப்புள்ளது. மாக்னசைட் : கஞ்சனுரில் குறைந்த அளவு கிடைக்கிறது. நிக்கல் : கஞ்சனுரில் கிடைக்க வாய்ப்பு உள்ளது. குவார்ட்ஸ் : தென்கனிக் கோட்டை வட்டத்தில் பின்ன மங்கலத்தில் தரமான குவார்ட்ஸ் 10,1520 டன்களும், பஞ்சப் பள்ளியில் சுமார் 93,750 டன்களும் கிடைக்கக்கூடும் என்று ஆய்வு கூறுகிறது. கருங்கல் : அஞ்சன ஹள்ளி, பேவனுர், பெண்ணாகரத்தில் 20,00,000 கனமீட்டர் பரப்பளவில் கருங்கல் தென்படுகின்றன. அரூர் வட்டத்தில் 6,00,000 கன மீட்டரிலும், பாலக்கோடு வட்டத்தில் சுமார் 18,000 கன மீட்டரிலும் கிடைக்கிறது. தென்கனிக் கோட்டைப் பகுதியில் சுமார் 15600 கன மீட்டர் கருங்கல் கிடைக்கிறது. கிரே கிரானைட் : தர்மபுரி, கிருஷ்ணகிரி வட்டங்களில் கிடைக்கிறது. பாலீஷ் செய்யப்பட்ட கற்கள் ஜப்பானுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. டாமின் (TAMIN) : தமிழ்நாடு மினரல்ஸ் என்னும் அரசு நிறுவனம் கீழ்கண்ட இடங்களில் பணி செய்து வருகிறது. கிருஷ்ணகிரி வட்டத்தில் சேந்தரப்ள்ளி; சூலமலை; அரூர் வட்டத்தில் கோபிநாதம்பட்டி; பெண்ணாகரம் வட்டத்தில் அஜ்ஜனஹள்ளி, பேவனுர், ஜம்னா ஹள்ளி, தொன்ன ஹஂட்டஹள்ளி மற்றும் பத்ரஹள்ளி முதலிய இடங்களில் டாமின் நிறுவனங்கள் பணியாற்றுகின்றன. இங்குத்தயாராகும் கற்கள் குறிப்ாக ஜப்பான், மேற்கு ஜெர்மனி, இங்கிலாந்து போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதியாகின்றன. மாவட்டத்தின் மொத்த பரப்பில் 33% காடுகளாகும். மாநில அளவில் இதன் பங்கு 14.3% ஆகும். மொத்த வனப்பரப்பு:3,66,231 ஹெக்டேர். தர்மபுரி மாவட்டத்தில் கிடைக்கும் முக்கிய காட்டுப் பொருள்களும், பரப்பளவும்: 1. விறகு மரங்கள் 3467 ஹெக்டேர் 2. சாதாமரங்கள் 657 ஹெக்டேர் 3. மூங்கில் 3359 ஹெக்டேர் 4. சந்தனமரம் 574 ஹெக்டேர் 5. யூகலிப்ட்ஸ் 1483 ஹெக்டேர் 6. புல் 2712 ஹெக்டேர் 7. தேக்கு மற்றும் வீடு கட்ட உதவும் மரங்கள் 517 ஹெக்டேர் 8. புளியமரம் 1010 ஹெக்டேர் தர்மபுரி மாவட்டத்தில் பல்வேறு பழங்குடியினர் வாழ்ந்து வருகின்றனர். அவர்களில் குறும்பர், இருளர், பஸ்தர், சிவாச்சாரத்தார் முதலியோர். குறும்பர் : குறும்பரில் எக்கிடி, ஈடிகர் என்ற பிரிவு உண்டு. ஆடுவளர்ப்பையே முக்கிய தொழிலாகக் கொண்டுள்ளனர். மற்ற மலைவாழ் மக்களை விட பொருளாதாரத்தில் குறும்பர் சற்று உயர்ந்தே காணப்படுகின்றனர். இவர்கள் பேசும் மொழியில் தெலுங்கு வாடை வீசுகிறது. இவர்கள் மஞ்சு மலையிலும் பிற இடங்களிலும் வாழ்கின்றனர். இருளர் : இருளர்கள் சித்தாபுரம், கடிநாடு, ஹோபள்ளி முதலிய இடங்களில் பரவி வாழ்கின்றனர். ஏறத்தாழ 300 குடும்பங்கள் இவ்விடங்களில் உள்ளனர். இருளர்களுக்கு சொந்த வீடு குறைவு. காட்டு, மேட்டிலேதான் இன்றும் வாழ்கின்றனர். இவர்களின் முக்கியத்தொழில் தேன் எடுப்பதும், அரக்கு விற்பனையும்தான். மாரண்ட ஹள்ளியின் பல பகுதிகளில் இன்று வாழ்கின்றனர். இவர்களை அச்சுறுத்துவது அம்மை நோயாகும். பஸ்தர் : 'பஸ்தர்' என்னும் கன்னடச் சொல்லுக்கு செம்படவர் என்று பொ ருள். இவர்களை மலைநாட்டு பரதவர் என்று சொல்லலாம். நீர் நிலைகளின் அருகிலேயே இவர்கள் குடியிறுப்புகள் அமைந்துள்ளது. காவிரியை ஒட்டி ஊட்ட மலைப்பகுதி, மேட்டூர் அணைப்பக்கம் உள்ளே கோட்டையூர், பண்ணவாடி, முதலிய இடங்களில் மீன்பிடி தொழில் செய்து வாழ்ந்து வந்தாலும் ஒகேனேக்கல் பகுதியில் அதிகம் காணப் படுகின்றனர். சிவாச்சாரத்தார் : சிவாச்சாரத்தார் இன்று பழங்குடிகளைப் போல இருந்தாலும். இவர்கள் பழங்குடிகள் அல்லர். முஸ்லீம் படையெடுப்பின் போது பயந்து தர்மபுரி மாவட்டத்தில் தஞ்சம் புகுந்தவர்கள். சைவ சமயத்தில் உட்பிரிவான 'லிங்காயத்'துக்கள் (கழுத்தில் லிங்கம் கட்டியிருப்பார்கள்). மற்ற மூன்று பழங்குடிகளுக்கும் இவர்களே குருக்களாக இருந்து திருமண சடங்கை நிறைவேற்றுவார்கள். தர்மபுரி மாவட்டத்திலுள்ள 'குடகபெட்டா' என்ற மலையில் வாழ்கின்றனர். இவர்கள் கன்னடத்தையே தாய்மொழியாகக் கொண்டவர்கள். பழங்குடியினரிடையே இருப்பதால் இவர்கள் வாழ்க்கை முறையும் அவர்களைப் போலவே இருக்கிறது. இருந்த போதிலும் கூட தங்கள் தனித்துவத்தை இழக்காமல் வாழ்ந்து வருகின்றனர். சனவரி மாதத்தில் ஓசூர் வட்டத்திலுள்ள திம்ம சமுத்திரத்தில் சாப்பாளம்மன் பெருவிழா நடக்கும். பிப்ரவரியில் ஓசூர் வட்டத்திலுள்ள மடகொண்டபள்ளித் தேர் திருவிழாவிலும், அரூர் வட்டத்திலுள்ள தீர்த்தாமலை தேர்த்திருவிழாவும், சோளமரத்துப்பட்டி சிவராத்திரி பெருவிழாவும் குறிப்பிடத்தக்கவை. மார்ச் மாதத்தில் ஓசூர், தர்மபுரி வட்டத்திலுள்ள சூடநா த சுவாமி தேர்திருவிழாவும், அதமன் கோட்டைக் காளியம்மன் பெருவிழாவும் காணத்தக்கவை. ஏப்ரலில் தென்கனிக் கோட்டை பெத்தராய சுவாமி கோவில் தேர்த்திருவிழாவும், இந்தூர் காளியம்மன் பெருவிழாவும் சிறப்பாக நடக்கும். ஆகஸ்ட் மாதத்தில் அரூர், தர்மபுரி வட்டங்களில், இருளப்பட்டி கன்னியம்மன் கோயில் பெருவிழாவும், ஒகனக்கல் ஆடிப் பெருக்கும் காணத்தக்கவை. தர்மபுரி மாவட்டம் தொழில் வளர்ச்சியில் மிகவும் பின் தங்கியே காணப்படுகிறது. தற்போது கிருஷ்ணகிரி, ஓசூர் வட்டங்கள் தொழில் மையங்களாக வளர்ந்து வருகின்றன. இம்மாவட்டத்தில் பதிவு பெற்ற சிறுதொ ழிற் கூடங்கள் 1108. இவற்றுள் ஓசூர், கிருஷ்ணகிரி வட்டங்களில் மட்டும் 384 சிறுதொழில் நிறுவனங்கள் அமைந்துள்ளன. மரவள்ளிக் கிழங்கிலிருந்து சேமியா போன்ற பொருள் தயாரிக்கும் தொழிலகங்கள் அரூர், தர்மபுரி வட்டங்களில் அதிகமாகக் காணப் படுகின்றன. கிருஷ்ணகிரியில், சூரியகாந்தி எண்ணெய் தயாரிக்கும் ஆலை ஒன்றை அரசு நடத்துகிறது. அரூர் வட்டத்தில் உமியிலிருந்து எண்ணெய் தயாரிக்கும் பணி நடைபெறுகிறது. சிப்காட் தொழிற்பேட்டைகள் : பெங்களூருக்கு 35 கி.மீ. முன்பாக சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில், 1200 ஏக்கர் நிலப்பரப்பில் பெரிய தொழிற்பேட்டை அமைக்கப்பட்டுள்ளது. இதுபோலவே இதற்கு 8 கி.மீ. தொலைவில் இரண்டாவது தொழிற்பேட்டை சுமார் 500 ஏக்கரில் ஓசூர்-கிருஷ்ணகிரி நெடுஞ்சாலையில் செயல்படுகிறது. அசோக் லேலண்ட் : ஓசூரில் இதன் கிளை நிறுவனம் அமைந்துள்ளது. இங்கு பஸ், லாரி முதலியவற்றுக்குப் பாடி கட்டுதல் நடைபெறுகிறது. பேருந்துகளுக்கு தேவைப்படும் பலவித உதிரிப்பாகங்கள் இங்கு தயாரிக்கப்படுகின்றன. வெளிநாட்டுத்தொழில் நுணுக்க உதவியுடன் நடைபெறும் இத் தொழிற்சாலை, பேருந்துகளை ஏற்றுமதியும் செய்து வருகிறது. டி.வி.எஸ். மொப்பெட் : டி.வி.எஸ் நிறுவனத்தினர் மொப்பெட் என்னும் இருசக்கர மோட்டார் சைக்கிள்களை இங்கு தயாரிக்கின்றனர். இவற்றுக்குத் தேவைப்படும் உதிரி பாகங்களும் இங்கேயே வடிவமைக்கப்படுகின்றன. இங்கிலீஸ் எலட்ரிகல்ஸ் : மின்சார வேலைகளுக்குத் தேவையான சுவிட்சுகள், ஹோல்டர்கள், பியூஸ்காரியர் மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் தயாரிக்கப்பட்டு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இதுவும் ஒரு கிளை நிறுவனமாகும். இதன் தலைமையிடம் சென்னையில் உள்ளது. புரூட் ப்ராசசிங் சென்டர் : பழரசங்கள், ஊறுகாய்கள் போன்ற அத்தியாவசியப் பொருட்கள் இங்கிருந்து பல இடங்களுக்கும் அனுப்பப்படுகின்றன. இவற்றை டின்களில் அடைத்து வெளிநாடுகளுக்கும், பாட்டில்களில் அடைத்து உள் நாட்டிலும் விற்பனைக்கு அனுப்புகின்றனர். பழங்களை நெடுநாள் பாதுகாத்து வைக்கத்தக்க 'கோல்ட் ஸ்டோரேஜ்' வசதியும் உண்டு. இண்டியன் டுபாக்கோ : பலவகையான புகையிலைகளைத் தரம் பிரித்து, பக்குவப்படுத்தி பல்வேறு வடிவங்களில் சிகரெட், சுருட்டு, பீடி போன்ற பொருள்கள் தயாரிக்கத்தக்க வகையில் இங்கு பல்வேறு பரிசோதனைகள் செய்யப்பட்டு பல இடங்களுக்கும் அனுப்பப்படுகிறது. லட்சுமி ஆடோமெடிக் லும்ஸ் : தமிழகத்தில் நடைபெறும் பல்வேறு ஆலைகளுக்குத் தேவைப்படும் விசைத்தறிகள், மற்றும் உதிரிபாகங்கள் இங்கு தயாராகின்றன. பிரிமியர் மில்ஸ், ஏஷியன் பேரிங்ஸ், லக்ஷ்மி ரிங் டிராவலர்ஸ் போன்ற தொழில் நிறுவனங்களும் இம்மாவட்ட தொழில் வளர்ச்சிக்கு உறுதுணையாக விளங்குகின்றன. ஊத்தங்கரை நூற்பாலை : ஆறாவது ஐந்தாண்டுத் திட்டத்தின் கீழ், ஊத்தங்கரையில் நிறுவப்பட்டுள்ள தர்மபுரி மாவட்ட கூட்டுறவு நூற்பாலை மொத்தம் 25520 கதிர்களுடன் இயங்கி வருகிறது. இவ்வாலை முழுதிறனில் செயல்பட்டால், மாவட்டத்தில் விளையும் மொத்த பருத்தியையும் பயன்படுத்தக் கூடிய வாய்ப்பு இருக்கிறது. கிருஷ்ணகிரி பால்பவுடர் தொழிற்சாலை : 3 கோடி ரூபாய் செலவில் கிருஷ்ணகிரி பால்பவுடர் தொழிற்சாலை நிறுவப்பட்டுள்ளது. சுமார் 27 ஏக்கர் நிலப்பரப்பில் செயலாற்றும் இந்தத் தொழிற்சாலையில் நாளொன்றுக்கு ஒரு லட்சம் லிட்டர் பால் பதப் படுத்தும் பிரிவும், 10டன் பால் பவுடர் தயாரிக்கும் பிரிவும், 6 டன் வெண்ணெய் தயாரிக்கும் பிரிவும், 2டன் நெய் தயாரிக்கும் பிரிவும் அடங்கியுள்ளன. ஸ்டார்ச் சர்வ் : ஸ்டார்ச் மற்றும் ஜவ்வரிசி தொழிற்சாலைகள் 37 இம்மாவட்டத்தில் அ மைந்துள்ளன. ஸ்டார்ச் சர்வ் என்னும் தொழிற் கூட்டுறவு சங்கம் 1982-ஆம் ஆண்டு பாப்பி ரெட்டிப் பட்டியிலும் இதன் கிளை அலுவலகம் சேலத்திலும் அமைக்கப்பட்டுள்ளன. தர்மபுரி மாவட்டத்தில் இச்சங்கத்தின் சுமார் 30 தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இதன் மூலம் மரவள்ளிக் கிழங்கு பயிரிடும் விவசாயிகள் நன்கு பயனடைந்து வருகின்றனர். ஆண்டுக்கு சுமார் 45,000 மூட்டைகள் மரவள்ளிக் கிழங்கு மாவு விற்பனையாகிறது. இம்மாவு மூட்டைகளைத் தேசிய பஞ்சாலை நிறுவனம், கூட்டுறவு நூற்பாலைகள், இண்டோ பர்மா பெட்ரோலியம் கம்பெனி மற்றும் வெளிமாநில நிறுவனங்களும் கொள்முதல் செய்கின்றன. தர்மபுரி : மாவட்டத்தின் தலைநகர் தர்மபுரி. சிறந்த வணிகத்தளமாகவும் விளங்குகிறது. தர்மபுரியின் உட்பிரிவுகளாக விருபாட்சிபுரம், வெள்ளைக் கவுண்டன் பாளையம், கொமரசன்னஹல்லி, அன்னசாகரம், மட்டி கோணம் பாளையம், பழைய தர்மபுரி முதலியவை அடங்கும். தோல், நெசவு, வெண்ணெய்க்கு சிறப்புற்று விள ங்குகிறது. மாவட்டத் தலைநகராக இருப்பதால் இங்கு கல்வி, மருத்துவம், அரசு தலைமை அலுவலகங்கள் முதலியவை அமைந்துள்ளன. மன்றோ என்ற ஆங்கில ஆளுனருக்கு தர்மபுரி பிடித்த இடமாக திகழ்ந்ததை இங்குள்ள கல்வெட்டு கூறுகிறது. புளியும், பீடியும் இங்கிருந்து ஏற்றுமதி செய்யப்படுகிறது. இவ்வூரில் உள்ள காமாட்சி ஆலயத்தில், மூன்றாம் குலோத்துங்கனின் 10-12-ஆம் ஆண்டு ஆட்சிப் பெருமைகளைச் சிறப்பித்துக் கூறும் கல்வெட்டு இருக்கிறது. தர்மபுரியிலிருந்து 6-வது மைலில் மோடூர் சாமுண்டி அம்மன் மந்து கல்வெட்டில் தகடூரில் திருமணத்திற்கு வரி வசூலித்த செய்தி காணப்படுகிறது. ஒகனக்கல் : இம்மாவட்டதில் உள்ள தலைசிறந்த சுற்றுலாத் தலமாகும். தர்மபுரியிலிருந்து 25 கி.மீ. தொலைவில் உள்ளது. ஜூலை மாதத்திலிருந்து ஆகஸ்ட் வரை கூட்டம் அலைமோதும். தமிழகத்தில் காவிரி இங்கு தான் எட்டிப் பார்க்கிறது. தோப்பூர் மலைத் தொடரில் 780 அடி கடல்மட்டத்திற்கு மேல் உள்ள பகுதியில் சந்திக்கிறது. பின்ன ர் இரண்டாகப் பிரியும் காவிரி 86 அடி ஆழத்தில் ஒரு பள்ளத்தில் விழுகிறது. விழும் இடம் தான் 'ஒகனக்கல்' இங்கு காவிரி 36 பிரிவுகளாகப் பிரிந்து அருவியாக விழும் அழகை காண்பது மனதிற்கு பெரும் மகிழ்வைத் தரும். விழும் தண்ணீரின் திவலைகள் புகைபோலப் காணப்படுவதால் தான் இதைக் கன்னடத்தில் 'புகையும் கல்' என்னும் பொருளில் ஒகனக்கல் என்று அழைத்தார்களாம். இங்கு எண்ணெய் தேய்ந்து அருவியில் குளிப்பதே தனி அனுபவம், சமதரையிலிருந்து 6 அடியில் விழும் சிற்றருவியில் பொதுமக்கள் குளிப்பதற்கு ஏற்ப வசதி செய்யப்பட்டுள்ளது. காவிரியாறு அருவியாக விழும் இடத்திற்கு முன் ஆறாக ஓடும் இடத்திலும், அருவியில் செல்லவும் 'பரிசல்' (வட்டமாக அமைந்துள்ள தட்டுபோல இருக்கும் இதன் கீழ் பகுதி தோலால் மூடப்பட்டிருக்கும்) உண்டு. இங்கு மீன் வறுவல் புகழ்பெற்றது. மலையேறவும் ஏற்ற இடம். சிறு விலங்குகள் காட்சிக் கூடமும், முதலைப்பண்ணையும் உண்டு. தை, ஆடி, அமாவாசைகளில் மக்கள் பெருமளவு கூடுவார்கள். அரூர் : வட்டத் தலைநகர் சேலத்திலிருந்து 35கி.மீ. தொலைவில் உள்ளது வளர்ந்து வரும் வட்டமாகும். அரூர் வட்டம், நல்ல விவசாய மாவட்டமாகும். இங்கு தானிய விளைச்சல் நன்றாக உள்ளது. ஓசூர் : இவ்வூர் இவ்வட்டத் தலைநகராக விளங்குகிறது. ஓசூர் வட்டம் தற்போது தொழில் மயமாகி வருகிறது.பட்டு வளர்ப்பு இங்கு அதிகமாக நடைபெறுகிறது. ஓசூரின் உட்பிரிவுகளாக கோட்டை, புதுப்பேட்டை, பழையகோட்டை, முதலிய பகுதிகள் அடங்கும், ஓசூர் நகரைச் சுற்றிகாய்கறிகள் பயிர் செய்யப்பட்டு பெங்களூர் செல்கிறது. இங்கு புதன் கிழமைகளில் சந்தை கூடுகிறது. பெங்களூருக்கு இணையான உயரத்தில் உள்ளதால் பெங்களூருக்கும் இணையான வெப்பநிலை இங்கு நிலவுகிறது. பெங்களூரிலிருந்து 1 மணி நேர பேருந்து பயணதுரத்தில் உள்ள, தமிழகத்தின் எல்லை ஊர் இது. இராமநாயக்கன் ஏரிக்கு வடக்கில் உள்ள கோட்டையும், ஏரியும் சிறந்த கட்டுமானங்களைப் பெற்றுத் திகழ்கிறது. கிருஷ்ணகிரி : வட்டத் தலைநகர். புளியும், பீடியும் பல இடங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இதன் தட்பவெப்பநிலை உடல் நலத்திற்கு ஏற்றது. கூட்டுறவுத் துறையில் தன்னிகரற்று விளங்குகிறது. ஓசூருக்கு அடுத்த கிருஷ்ணகிரி வட்டத்தில் தொழில் வளர்ச்சி உள்ளது. இங்கு சூரியகாந்தி எண்ணெய் தயாரிக்கும் ஆலை ஒன்றை அரசு நிறுவனம் நடத்துகிறது. கிருஷ்ணகிரி வட்டத்தில் ஊராட்சிகள் 30, அகசிப் பள்ளி, பெரியாமுத்தூர் இரண்டும் பெரிய ஊராட்சிகள். சிக்கப்பூவாதி, கட்டி நயினாப்பள்ளி, மல்லி நாயனப்பள்ளி போன்ற ஊர்களில் சுமார் 1100 மலை வாழ்மக்கள் வாழ்கின்றனர். பாலக்கோடு : இவ்வட்டத்தில் 56 ஊராட்சிகளின் மொத்த மக்கள் தொகை 1,72,000 பேர் தர்மபுரியிலிருந்து 14 மைல் தொலைவில் உள்ள ஊர். திங்கட் கிழமைகளில் கூடும் சந்தைகளில் பலாப்பழம், கேழ்வரகு, வெல்லம், எள், தேங்காய், மாங்காய் அதிகமாக விற்பனைக்கு வருகின்றன. அம்மணி மல்லாபுரம், ஜர்தாலவ், காரிமங்கலம், மாரண்ட ஹள்ளி, பாலக்கோடு முதலியவை ஊராட்சிகள். ஊத்தங்கரை : ஊத்தங்கரை ஊராட்சி ஒன்றியத்தில் அடங் கியுள்ள 59 ஊராட்சிகளிலும் 1,68,000 பேர் வசிக்கின்றனர். கல்லாவி, கன்னட ஹள்ளி, சிங்காரப் பேட்டை, ஊத்தங்கரை முதலிய ஊராட்சிகள் இவ்வொன்றியத்தில் முக்கியமானவை. நல்லாம் பள்ளி : இவ்வொன்றியத்தில் 32 ஊராட்சிகள் உள்ளன. அவை மனித்த ஹள்ளி, பாஹளஹள்ளி, கம்மம் பள்ளி, தோப்பூர் முதலியன. மக்கள் தொகை :1,18,0000. தர்மபுரியிலிருந்து 6 மைல் தொலைவில் உள்ளது. ஜமக்காள நெசவுக்கு புகழ் பெற்றது. இங்கிருந்து பெங்களூருக்கு பெருமளவில் செல்கிறது. பெண்ணாகரம் : சுமார் 2,00,000 மக்கள் தொகை கொண்ட இவ்வூராட்சி ஒன்றியத்தில் 35 ஊராட்சிகள் அடங்கியுள்ளன. இவ்வூர் தர்மபுரிக்கு 19 மைல் தொலைவில் அமைந்துள்ளது. செவ்வாய்க்கிழமை சந்தை நாள். அஞ்செட்டி காடுகளிலிருந்து மூங்கில் இங்குதான் சேமித்து வைக்கப்படுகின்றன. ஒகனக்கல் - பெரும்பாலை செல்லும் வழியில் உள்ளது இவ்வூர். மொரப்பூர் : 45 ஊராட்சிகள் கொண்ட இவ்வொன்றியத்தில் மக்கள் தொகை : 1,50,000. இங்கு இரயில் வசதி உண்டு. இவ்வொன்றியத்தில் ஈச்சம்பாடி, கடத்தூர், கம்பய நல்லுர் முதலானவை முக்கிய ஊராட்சிகளாகும். மொரப்பூருக்கு அருகில் உள்ள தொட்டம்பட்டியில் ஒருகோடி மூலதனத்தில் இரும்பு ஆலை உள்ளது. பாப்பிரெட்டிப்பட்டி : மொத்த ஊராட்சிகள் 21. மக்கள் தொகை 1,00,000; மலைவாழ்மக்கள் 13,000 பேர் உள்ளன. பூதக்காடு, மஞ்சவாடி, மேலாயனுர், பி.பள்ளிப்பட்டி, பட்டுக்கோணாப்பட்டி சித்தேரி முதலிய ஊராட்சிகளில் மலைவாழ் மக்கள் அதிகமாக வாழ்கின்றன. தளி : 50 ஊராட்சிகள் அடங்கியது. குறிப்பிடத்தக்க ஊராட்சிகள் : அஞ்செட்டி, நாட்ரா பாளையம்; இவ்வூர் ஓசூரிலிருந்து 16மைல் தொலைவில் உள்ளது. கோட்டை தகர்க்கப்பட்டு விவசாயம் செய்யப் பட்டு வருகிறது. கல்வி, வாணிகம், மருத்துவத்தில் சிறந்து விளங்குகிறது. சனிக்கிழமை சந்தை கூடுகிறது. சந்தையில் காட்டுப் பொருள்கள், துணிவகைகள், நல்ல காய்கறிகள் விற்கப் படுகின்றன. இங்கிருந்து பெங்களூருக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இவ்வூர் உடல் நலத்திற்கு ஏற்றது. கேளமங்கலம் : தற்போது கீழமங்கலம் என்று அழைக்கப்படுகிறது. ஓசூரிலிருந்து 15மைல் தொலைவில் உள்ளது. இவ்வூர் மாட்டு சந்தைக்குப் பெயர் பெற்றது. ஆனெக்கல். தேன்கனிக் கோட்டைப் பகுதிகளிலிருந்து இங்கு மாடுகள் விற்பனைக்கு வருகின்றன. 1673 இல் குமார ராஜா தளவாய் என்பவரால் கட் டப்பட்ட பெரிய பேளூர் அணைக்கட்டு உள்ளது. இங்கு கேழ்வரகு, எள் மிகுதியாக விளைகிறது. சூலகிரி : ஊரின் கிழக்கே மூன்று சிகரங்கள் காணப்படுவதால் இப்பெயர் பெற்றுள்ளது. இம்மலையின் உயரம் சுமார் 2895 அடி. சூலகிரி பஞ்சாயத்து ஒன்றியத்தின் தலைமையகமாக இருப்பதால், கல்வி, மருத்துவம், வணிக இடமாகவும் திகழ்கிறது. இங்கு வெள்ளிக் கிழமை சந்தை கூடுகிறது. இது பாளையப்பட்டாக இருந்தவூர். ஊருக்கு மேற்கில் இரண்டு மைல் தொலைவில் மங்களூர் ஓடுகள் தயாரிக்கும் நிறுவனங்கள் கம்மன் தொட்டி என்ற பகுதியில் நடந்து வருகிறது. காவேரிப்பட்டணம் : கிருஷ்ணகிரிக்கு தெற்கில் 7 1/2 மைல் தொலைவில் பெண்ணையாற்றங்கரையில் இவ்வூர் உள்ளது. மைசூர் போர்களில் சிறப்பிடம் பெற்றது. நல்லெண்ணெய் உற்பத்தி மிகுதியாக இவ்வூரில் நடைபெறுகிறது. இத்தொழிலில் வாணிபச் செட்டியார்கள் ஈடுபட்டுள்ளனர். இங்குள்ள கோட்டையினுள், கோட்டை வெங்கட்ரமணசாமி கோயில் உள்ளது. இங்கு ஆய்வு மேற்கொள்ளப் பட்ட போது, இடிந்த பல கட்டிடப்பகுதிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. பர்கூர் : கிருஷ்ணகிரிக்குத் தெற்கில் ஆறுமைல் தொலைவில் பர்கூர் உள்ளது. திருப்பத்தூர் - கிருஷ்ணகிரி இரயில் பாதையிலும், திருப்பத்தூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலைக் கருகில் இவ்வூர் அமைந்திருக்கிறது. இங்கு மாங்காய், தேங்காய்க்கு பெயர் பெற்றவூர். வியாழக்கிழமை ச ந்தை இங்கு கூடுகிறது. பட்டுநூல் தயாரிப்பில் இவ்வூர் சிறந்து விளங்குகிறது. வேப்பனப்பள்ளி : கிருஷ்ணகிரியிலிருந்து 14 மைல் தொலைவில் உள்ளது. பஞ்சாயத்து ஒன்றிய தலைநகர். மார்கண்ட நதியின் கரையில் அமைந்துள்ளது. புதன் தோறும் சந்தை கூடுகிறது. காய்கறிகள், போர்வைகள் வாங்க ஏற்ற இடம். மண்பானைகள் செய்வதும், கயிறு திரித்தலும் சிறப்புத் தொழில்களாக விளங்குகின்றன. பெண்ணையாறு, மார்கண்டநதி இரண்டிலும் மார சமுத்திரம், பனை பள்ளி, வேப்பன பள்ளி, நடுசோலை ஹென்னு கொள்ளு முதலிய இடங்களில் சிறு அளவில் அணைகள் கட்டப்பட்டு விவசாயம் செய்யப்படுகிறது. தேன்கனிக் கோட்டை : ஓசூரிலிருந்து 25கி.மீ. தொலைவில் உள்ளது. வனத்துறையினரின் சந்தனமரக்கிடங்கு ஒன்று உள்ளது. தாலி, அஞ்செட்டி, கீழமங்கலம் வழியாக இக்கோட்டையை அடையலாம். மலைச்சரிவுகளில் மக்கள் மிகுதியாக வசிக்கின்றனர். இதைப் புதுப்பேட்டை என்பர். பழைய பேட்டையில் பெருமாள் கோவில் உள்ளது. சித்திரையில் இங்கு நடைபெறும் தேர்த்திருவிழாவுக்குப் பல பகுதிகளிலிருந்தும் மக்கள் வந்து கூடுவார்கள். வியாழக்கிழமைகளில் சந்தை கூடுகிறது. வன ஆராய்ச்சி நிலையம் உள்ளது. புளி, சீயக்காய், அவரை முதலியவை பல ஊர்களுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. கேழ்வரகு, எள் போன்றவை அதிகமாக விளைகின்றன. மங்களூர் ஓடுகள் தயாரிப்பு நிலையங்கள் பல செயல்படுகின்றன. இங்குப்பட்டு நூல் உற்பத்தியும், பச்சை மூங்கிலில் குச்சி தயாரித்து ஊதுவத்தி செய்வதும் தொழில்களாக உள்ளன. அதமன் கோட்டை : தர்மபுரியிலிருந்து 4மைல் தொலைவில் அதமன் கோட்டை இருக்கிறது. தகடூரை ஆண்ட அதியமான் பெயரை மக்கள் அதமனாக்கி விட்டனர். கோட்டை அழிந்து விட்டது. கோட்டையில் சோமேஸ்வரர் கோயில் பெரியது. விஷ்ணு, பைரவர், அங்காளம்மன் கோயில்களும் உள்ளன. பைரவர் கோயிலுக்கு மேற்புறத்தில் சமண சிற்ப வேலை பாடுகளை ஒரு கிராமத்தில் காணலாம். கோயிலில் பல கல்வெட்டுகள் உண்டு . அஞ்செட்டி துர்கம் : ஓசூர் வட்டத்தில் கேளமங்கலம் ஊருக்கு கிழக்கில் சுமார் 3மைல் தொலைவில் அஞ்செட்டி துர்கம் உள்ளது. இங்குள்ள மலையின் உயரம் 3192 அடி ஆகும். சிதையுற்ற கோட்டை மலைமேல் உள்ளது. கோட்டையில் ஒரு சிவாலயம் உள்ளது. பாகளூர் : ஓசூரிலிருந்து சுமார் 7 1/2 மைல் தொலைவில் அகழியுடன் கூடிய பாகளூர் கோட்டை உள்ளது. கோட்டையினுள் 5 கோவில்களும் சிதைவுற்ற அரண்மனையும் உண்டு. வீரபத்திர துர்கம் : பாலக்கோடு-ராயக்கோட்டை சாலையில் உள்ள பீகம் பள்ளியிலிருந்து மலை படிப் படியாக உயர்ந்து சுமார் 3088 அடி உயரத்தில் காணப் படுகிறது. இதற்கு வடகிழக்கில் சந்தைப்பேட்டை கிராமம் உள்ளது. இங்கு செந்திராய சுவாமி கோவிலைக் காணலாம். இங்கிருந்து மேற்கிலுள்ள உயர்ந்த சிகரத்தில் பெரிய கட்டிடமும், வெடிமருந்துக்கிடங்கும் உள்ளன. இதற்கருகில் இராம லட்சுமண சுனை உள்ளது. இது ஆழமான பள்ளத்தாக்கில் உள்ளது. தோப்பூர் : தர்மபுரிக்கு 16 மைல் தொலைவில் உள்ளது இவ்வூரில் சத்திரம் ஒன்று உண்டு. கிழக்கில் மனுகொண்ட மலையின் உச்சியில் தோப்பூர் கணவாயை நோக்கி கோட்டை ஒன்று தென்படுகிறது. வாரத்தில் திங்கள் தோறும் சந்தை கூடுகிறது. இங்குள்ள ஏரிக்கு தாமஸ் மன்ரோ ஏரி என்று பெயர். இதை வனத்துறை செடி உற்பத்திக்குப் பயன்படுத்தி வருகின்றனர். உத்தான பள்ளி : ஓசூர்-ராயக்கோட்டை நெடுஞ்சாலை யில் உள்ளது. இக்கிராமத்தின் தென்மேற்கே ஒருமைல் தொலைவில் தையராணாதுர்கம் என்னும் மலைக்கோட்டை உள்ளது. இது சுமார் 2930 அடி உயரத்தில் கட்டப்பட்டுள்ளது. இதற்கருகில் உள்ள அணை ஒன்றுக்கு மேலாகத் தொங்கும் பாறையில் அனுமான் உருவம் பொறிக்கப்பட்டுள்ளது. தீர்த்தாமலை : அரூ ருக்கு வடகிழக்கில் சுமார் 10மைல் தொலைவில் தீர்த்தாமலை உள்ளது. இம்மலையில் பல தீர்த்தங்கள் இருப்பதால் தீர்த்தங்களின் மலை என்ற பொருளில் அழைக்கப்படுகிறது. மலையடிவாரத்தில் சிவன் கோவில் உள்ளது. இங்குள்ள செங்குத்தான மலைமீது ஏறிச் சென்றால் தீர்த்தகிரீஸ்வரர் என்னும் கோவில் உள்ளது. இங்குள்ள 11 தீர்த்தங்களில் குளிக்கலாம் கோயிலுக்கு மேற்காகச் செல்லும் குறுகிய பாதை வழியாகப் போனால், சில்ல நாயக்கரின் மலைக்கோட்டை காணப் படுகிறது. இக்கோவிலில் பல கல்வெட்டுக்கள் காணப்படுகின்றன. தட்டக்கால் துர்கம் : கிருஷ்ணகிரி வட்டத்திலுள்ள வேலம்பட்டிக்கு தென் கிழக்கில் 2மைல் தொலைவில் உள்ளது. இங்கு புகழ்பெற்ற கோட்டை ஒன்று மலையில் காணப்படுகிறது. பாரமஹால் பகுதியில் சிறந்த முறை யில் பாதுகாக்கப் படும் கோட்டைகளுள் இதுவும் ஒன்று. கோட்டை வாயில்கள் கட்டட நுணுக்கங்களைப் பெற்றுத் திகழ்கிறது. வேடர்கள் அதிகம் வாழும் திட்டக்கல், துர்க்கத்திலிருந்து இரண்டு மைல் துரத்தில் உள்ள கிராமம். தென்கரைக் கோட்டை : அரூர் வட்டத்திலுள்ள மொரப்பூருக்குத் தென் கிழக்கில் சுமார் பத்து மைல் தொலைவில் தென்கரைக்கோட்டை அமைந்துள்ளது. இங்குள்ள திரோபதை அம்மன் கோயிலில் ஆண்டு தோறும் தீமிதி விழா சிறப்பாக நடைபெறும். கெட்டி முதலியார்கள் ஆளுகையில் இப்பகுதி இருந்தது. சிதையுற்ற கோட்டையில் சிவன், பெருமாள் கோவில்கள் உள்ளன. அரசியார் குளிப்பதற்கும், தானிய கிடங்கும் இங்கு தற்போது காணப்ப டுகிறது. சிங்காரப்பேட்டை : கிருஷ்ணகிரி வட்டத்தில், ஊத்தங்கரைக்கு 5மைல் தொலைவில் கிழக்காக அமைந்துள்ளது. இது மைசூர் போரால் சிறப்பிடம் பெற்றது. ஜாவடி மலையில் கிடைக்கும் தேக்கு,தே ன், மெழுகு முதலியன இங்கு மிகுதியாக விற்பனை செய்யப் படுகின்றன. ராயக்கோட்டை : கிருஷ்ணகிரியிலிருந்து 17 மைல் தொலைவில் உள்ளது. இங்குள்ள புதுப்பேட்டைக்கு அருகில் சிறிய கோட்டை உள்ளது. கோட்டை, கொத்தளங்களி ன் சுவடுகளை எங்கும் பார்க்கலாம். கோட்டைக்கு வடமேற்கில் சதுரமான கிணறு ஒன்று தோண்டப்பட்டுள்ளது. மலையுச்சியில் சதுரமான மேடை அமைக்கப்பட்டுள்ளது. இங்கிருந்து இயற்கைக் காட்சிளை ரசிக்கலாம். கோட்டை உச்சியை அடைவது கடினம். அங்குசகிரி : சூலகிரிக்கு 5மைல் கிழக்கில் இவ்வூர் இருக்கிறது . மலையின்உயரம் சுமார் 3038 அடி. இங்கு திம்மராயா கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் பிப்ரவரியில் நடைபெறும் திருவிழாவில் அன்னதானம் நடைபெறுகிறது. பேரிகை : பழைய பாலையப்பட்டு. பாகளூரிலிருந்து கிழக்காக 7மைல் தொலைவில் உள்ளது. பாளையக்காரர்களுக்குச் சொந்தமான அரண்மனையும், மண் கோட்டையும் உள்ளன. ஊருக்கு வடக்கில் பெரிய ஏரி ஒன்று காணப்படுகிறது. பட்டுத் தொழிலில் இப்பகுதி சிறப்புற்றிருந்தது. காய்கறிகளும், திராட்சையும் பல இடங்களுக்கும் செல்கிறது. பெத்தமுகலாலம் : ஓசூர் வட்டத்தில் மேலகிரி சமவெளிப் பகுதியில் இவ்வூர் அமைந்துள்ளது. கிளன்ஷா என்பவர் வசித்த வீடு தற்போதும் உள்ளது. இங்கு பல இடங்களில் உயரமான எறும்புப்புற்றுகளைக் காணலாம். இங்குள்ள கிளன்ஷா பண்ணைக்கு வடக்காக நான்கு மைல் தொலைவில் மேலகிரி மலைக் கோட்டை யின் சில பகுதிகளை காணலாம். பொம்மிடி : சேர்வராயன் மலையில் கிடைக்கும் காட்டுப் பொருள்களின் சிறந்த சந்தை கூடும் இடமாக உள்ளது. இங்கு தேன், தேக்கு, மெழுகு போன்ற பொருட்களை வியாழக்கிழமைகளில் கூடும் சந்தையில் வாங்க முடியும். இரயில் நிலையத்திற்கருகில் மேலக்கங்கவம்ச அரசரான ஸ்ரீபுருஷ முத்தரசர் காலக்கல்வெட்டுக்கள் இரண் டு கண்டெடுக்கப் பட்டுள்ளன. புட்டிரெட்டிப்பட்டி : மொரப்பூருக்கு கிழக்கில் எட்டாவது மைலில் உள்ளது. இவ்வூர், ஒரு புகைவண்டி நிலையமாகும். மருக்கொழுந்து பூ இங்கிருந்து பல ஊர்களுக்கும் செல்கிறது. இங்குள்ள அம்மன் கோவிலில் உள்ள தமிழ் கல்வெட்டு ஹரிஹரி புக்கரிடமிருந்து விஜய நகரத்தை மீட்டு தன் மகனுக்குப் பட்டம் கட்டிய சாளுவ நரசிம்மனைப் பற்றிய செய்திகளைக் கூறுகிறது. சோழப்பாடி : தர்மபுரிவட்டத்தில் காவிரியும், தோப்பூர் ஆறும் கூடும் இடத்திலுள்ள கிராமம். சோழப்பாடி மூன்று பகுதியாக விளங்குகிறது. கோவில் உள்ள இடம் 'கோவில் சோழப்பாடி' இங்கு ஆடிப்பெருக்கின்போது மக்கள் கூடுவார்கள். தோப்பூர் ஆற்றுக்கு எதிர்புறம் கோட்டையுள்ளதால் அப்பகுதி 'கோட்டை சோழப்பாடி' எனப்படுகிறது. சந்தை கூடும் இடத்தை 'சந்தை சோழப்பாடி' என்கின்றனர். கங்கணகிரி : கிருஷ்ணகிரி வட்டத்தில், வேலப் பட்டிக்கு வடக்கில் 3கி.மீ. தொலைவில் உள்ளது. இங்குள்ள மலையின் உயரம் 3450 அடி. இந்தவூருக்கு கிழக்கிலுள்ள கோட்டப்பள்ளி வழியாகவும், தென்மேற்கில் உள்ள பேலாகுளி வழியாகவும் இம்மலை உச்சியை அடையலாம். உச்சியில் கோட்டை உள்ளது. பொறியியல் வளர்ச்சியின் உச்சமாக இக்கோட்டை விளங்குகிறது. கும்மாளபுரம் : ஓசூர் வட்டத்தில் தளி கிராமத்திற்கு வடக்கில் 5மைல் தொலைவில் இந்தவூர் உள்ளது. இவ்வூரைச் சுற்றி நிறைய சிறிய கோவில்கள் உள்ளன. செப்டம்பர் மாதத்தில் கெளரம ஜாத்ரா என்னும் பண்டிகைக்கு பக்கத்து ஊர்களிலிருந்து பக்தர்கள் கலந்து கொள்வார்கள். இக்கோவிலின் சிறப்பு : இங்கு உச்சவமூர்த்தி கிடையாது. திருவிழா நாளில் குளத்திலிருந்து மண் எடுத்து உருவம் படைத்து, ஒருமாதம் கழித்து அதை மீண்டும் குளத்தில எறிந்து விடுவது மரபாகும். ஹடேதுர்கம் : ஓசூர் வட்டத்திலுள்ள ஊர். கீழமங்கலம்-ராயக்கோட்டை நெடுஞ்சாலைக்குத் தெற்கில் சுமார் மூன்று மைல் தொலைவில் உள்ளது. இவ்வூர் மலையின் உயரம் சுமார் 3200 அடி. புரம் கிராமத்தின் வழியாக இம்மலையில் ஏற வசதி உள்ளது. ஜகதேவி பாளையம் : இவ்வூர் கிருஷ்ணகிரிக்குத் தென்கிழக்கில் ஆறுமைல் தொலைவில் இருக்கிறது. இம்மலையில் இரண்டு சிகரங்கள் தென்படுகின்றன. மேற்கிலுள்ள சிகரத்திற்குக் கேவல்கடி என்றும் கிழக்கிலுள்ள சிகரத்திற்கு ஜகதேவிதுர்கம் என்றும் பெயர். கம்பய நல்லூர் : மொரப்பூர் இரயில் நிலையத்திற்கு வடமேற்கில், எட்டு மைல் தொலைவில் இவ்வூர் உள்ளது. ஊருக்கு வடகிழக்கில் சுமார் 2 மைல் தொலைவில் பெண்ணையாற்றுடன் கம்பையநல்லூர் ஆறு கலக்கிறது. இங்குள்ள கோட்டைக்கு சேர்வராயன் கோட்டை என்று பெயர். தாசிநாதேசுவரர் கோவிலில் நிறைய கல்வெட்டுக்கள் உண்டு. இங்கு சந்தை வெள்ளிக் கிழமைகளில் கூடுகிறது. காரிமங்கலம் : தர்மபுரியிலிருந்து காரிமங்கலம் 14-மைல். வள்ளல் காரியின் பெயர் பெற்று விளங்குகிறது. இம்மலையில் அருணேஸ்வரர் கோயில் உள்ளது. மல்லப்பாடி : பர்கூருக்கு தென்கிழக்கில் 2மைல் தொலைவில் உள்ளது. பாய் முடைதலுக்கு பேர் பெற்றது. இங்கு குகை ஓவியம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. குண்டணி : குண்டணி மலையில் நிறை ய கோவில்கள் உள்ளன. குண்டீஸ்வரர் ஆலையம் தனித்துவம் மிக்கது. நிறைய கல்வெட்டுக்கள் உள்ளன. மகாராஜாக்கடை : கிருஷ்ணகிரியிலிருந்து ஏழாவது மைலில் அமைந்துள்ளது. இங்கு சுமார் 4000 அடி உயரத்தில் உள்ள மலையை மகாராஜா மலை என்பர். இங்கும் குகை ஓவியம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலே கோட்டை இருக்கிறது. மாடக் கொண்டம் பள்ளி : ஓசூரிலிருந்து 10 மைலில் உள்ளது. கிருத்துவ சமயத்தலம். மட்டிகிரி : ஓசூருக்கு 4 மைலில் உள்ளது. இங்கு பால் பண்ணை உள்ளது. நாகமலை : கிருஷ்ணகிரி வட்டத்தில், ஜகதே வி, மல்லப்பாடி ஊர்களுக்கு இடையில் நாகமலை உள்ளது. கிழக்குப் புறமாக இம்மலை மீது ஏற முடியும். மேற்கிலிருந்து மலை உச்சியை அடைவது கடினம். கோட்டையின் மதிற்சுவர்கள் உறுதியானவை. நாகராசம்பட்டி : காவிரிப்பட்டணம் ஒன்றியத்தைச் சேர்ந்தது. மலையிலுள்ள சிறு முடிச்சுக்குக் கோட்டை மலை எனப்பெயர். இங்குள்ள மண்டபத்தை அடுத்து ஆறு அங்குல சுற்றளவுக்கு ஒரு பொந்து காணப்படுகிறது. அதன் வழியாக சிறு கல்லையோ அல்லது கனமான பொருளையோ போட்டால் 100 அடிக்குக் கீழே போய் விழுகிறது. போர்க்காலங்களில் அவசர செய்தி அனுப்புவதற்கு இதை பயன்படுத்த இருக்கலாம் என்று சொல்கின்றனர். பஞ்சப்பள்ளி : மேலகிரி மலையின் அடிவாரத்தில் அமைந்த அழகான ஊர். பாப்பாரப்பட்டி : தர்மபுரிக்கு 10வது மைலில் உள்ளது. சுதந்திரப் போராட்ட வீரர் சுப்பிரமணிய சிவா, இங்கு ஆசிரமம் அமைத்து தங்கி இருந்தார். வியாழக்கிழமை சந்தை கூடுகிறது. கைத்தறிக்குப் புகழ்பெற்றது. பெரும்பாலை : பெண்ணாகரத்திற்குக் கிழக்கில் உள்ளது. இந்த ஊர்க்கோட்டையைச் சுற்றி பாம்பாறு இருக்கிறது. வணிகத்தலம். பொச்சம் பள்ளி : தர்மபுரியிலிருந்து 18 மைல் தொலைவில் உள்ளது. பழப் பாதுகாப்பு பண்ணை உள்ளது. ஞாயிற்றுக் கிழமை சந்தை கூடுகிறது.
நன்றி:
 |