தருமபுரி அருகே கிரேன் முறிந்து விழுந்து 2 சிறுவர்கள் சாவு
First Published : 17 March 2014 02:49 AM IST
- கிரேன் முறிந்து விழுந்ததில் உயிரிழந்த சிறுவர்கள் ஹரிபிரசாத், பார்த்திபன்.
தருமபுரி அருகே கிணறு தூர்வாரும் பணியின்போது கிரேன் முறிந்து விழுந்ததில் 2 சிறுவர்கள் உயிரிழந்தனர்.
தருமபுரி மாவட்டம், மாரண்டஹள்ளி அருகேயுள்ள வட்டகானம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சகோதரர்கள் வேலு, காளியப்பன். விவசாயிகள். இருவருக்கும் பொதுவான கிணற்றில் சில தினங்களாக கிரேன் உதவியுடன் தூர்வாரும் பணி மேற்கொள்ளப்பட்டு வந்தது.
சனிக்கிழமை தூர்வாரும் பணி நடைபெற்றபோது, எதிர்பாராதவிதமாக கிரேன் அறுந்து விழுந்தது. அப்போது, அருகில் விளையாடிக் கொண்டிருந்த வேலு மகன் ஹரிபிரசாத் (8), காளியப்பன் மகன் பார்த்திபன் (10) ஆகியோரையும் இழுத்துக் கொண்டு கிணற்றுக்குள் விழுந்தது.
இதில் பலத்த காயமடைந்த ஹரிபிரசாத் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். காயமடைந்த பார்த்திபன் சிகிச்சைக்காக பாலக்கோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார்.
இது வெளியில் யாருக்கும் தெரியாமல் கிணற்றின் அருகே குழிதோண்டி ஹரிபிரசாத் சடலத்தை புதைத்தனர். இத்தகவல் போலீஸார் மற்றும் வருவாய்த் துறையினருக்கு ஞாயிற்றுக்கிழமை காலை தெரியவந்தது.
சம்பவ இடத்துக்கு மருத்துவர்கள் குழுவினருடன் சென்ற அதிகாரிகள் புதைக்கப்பட்ட ஹரிபிரசாத் சடலத்தை தோண்டி எடுத்து அங்கேயே பிரேத பரிசோதனை செய்தனர்.
இதுகுறித்து மாரண்டஹள்ளி போலீஸார் வழக்குப் பதிவு செய்து, தலைமறைவான மல்லாபுரத்தைச் சேர்ந்த கிரேன் உரிமையாளர் ஆறுமுகத்தைத் தேடி வருகின்றனர்.
இச்சம்பவத்தில் உயிரிழந்த ஹரிபிரசாத் மல்லாபுரம் அரசுப் பள்ளியில் 3ஆம் வகுப்பும், பார்த்திபன் 5ஆம் வகுப்பும் படித்து வந்தனர்.
No comments:
Post a Comment