Marandahalli Map

Wednesday, April 30, 2014

கோடை வெயில் துவக்கம்: இளநீர் விற்பனை அமோகம்

கோடை வெயில் துவக்கம்: இளநீர் விற்பனை அமோகம்




பதிவு செய்த நாள்

06ஏப்
2014 

தர்மபுரி: மாவட்டத்தில், கோடை வெயில் கொளுத்த துவங்கியதால், இளநீர் விற்பனை களை கட்டி உள்ளது. தர்மபுரி மாவட்டத்தில், பல்வேறு பகுதிகளில் உள்ள மரங்கள் யாவும், பல்வேறு பணிக்காக அழிக்கப்பட்டதால், சில ஆண்டுகளாக மாவட்டத்தில் பருவமழை ஏமாற்றி வருகிறது. மேலும், மாவட்டத்தில் வெயிலின் அளவும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்தாண்டு பிப்ரவரி மாதம் துவக்கத்தில், பகல் நேரங்களில் வெயிலின் அளவு அதிகரித்து வந்தது.
மார்ச் மாதத்தில், கடந்த, 20ம் தேதி, 100.4 டிகிரியும், 21ம் தேதி, 100, 22ம் தேதி 100.7, 24ம் தேதி, 100, 25ம் தேதி 100.4, 29ம் தேதி, 101.3, 31ம் தேதி, 102.2 டிகிரியும், ஏப்ரல், 1ம் தேதி 102.2, 2ம் தேதி, 103.1 டிகிரி என வெயில் கொளுத்தியது. இதனால் பொதுமக்கள் பெரிதும் அவதியடைந்து வந்தனர்.
தர்மபுரி மாவட்டத்தில், சில தினங்களாக பகல் நேரங்களில் வாட்டி வரும் வெயிலில் இருந்து உடல் நலத்தை பாதுகாத்து கொள்ள, கோடைக்கு இதம் தரும் வகையில், இயற்கை பானமான இளநீர் கடைகளை பொதுமக்கள் நாடி வருவதால், இளநீர் விற்பனை களை கட்டி உள்ளது.
இதுகுறித்து, இளநீர் வியாபாரி கிருஷ்ணராஜ் கூறியதாவது:
தர்மபுரியில், கோடை காலங்களில் இளைஞர்கள் மற்றும் பெண்கள் அதிகளவில் பாட்டில்களில் அடைக்கப்பட்ட குளிர்பானங்களை, கடந்த காலங்களில் அதிகளவு பருகி வந்தனர்.
அவற்றில், பூச்சி மருந்து கலப்பதாக எழுந்த புகாரால், இயற்கை பானமான இளநீரை இளைஞர்கள் மற்றும் பெண்கள் ஆர்வமாக வாங்கி பருகி வருகின்றனர். குறிப்பாக, சில தினங்களாக, தர்மபுரியில் வெயிலின் தாக்கம் அதிகரித்து உள்ளதால், இளநீர் விற்பனை சூடு பிடித்துள்ளது. பாலக்கோடு, காரிமங்கலம், மாரண்டஹள்ளி ஆகிய பகுதிகளில் இளநீரை மொத்தமாக வாங்கி வந்து, தர்மபுரி பகுதியில், ஒரு இளநீர், 15 ரூபாய்க்கு விற்பனை செய்கிறோம்.
போதிய மழையில்லாததால், இளநீர் கொள்முதல் விலை, கடந்தாண்டை விட தற்போது உயர்ந்துள்ளது. இதனால் எங்களுக்கு குறைந்தளவு லாபம் மட்டும் கிடைக்கிறது. மேலும், கோடை காலங்களில் இளநீர் விற்பனை அதிகரிக்கும் போது, எங்களுக்கு வருமானம் சற்று அதிகரிக்கும், என்றார்.

No comments: