மாரண்டஅள்ளி வாரச்சந்தையில் ஆடு விற்பனை அமோகம்: வியாபாரிகள் ஏமாற்றம்
பதிவு செய்த நேரம்:2012-03-26 09:53:47
மாரண்டஅள்ளி: மாரண்டஅள்ளி ஞாயிறு சந்தையில் ஆடு விற்பனை சுறுசுறுப்பாக நடந்தது. பொதுமக்கள் போட்டிபோட்டு ஆடுகளை வாங்கிச் சென்றனர். இதனால் மொத்த வியாபாரிகள் ஏமாற்றமடைந்தனர்.
தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளியில் ஞாயிறு தோறும் சந்தை கூடுவது வழக்கம். யுகாதி பண்டிகையான வெள்ளிக்கிழமையன்று தர்மபுரி பகுதியில் பொதுமக்கள் பலர் அசைவத்தை தவிர்த்து வருகின்றனர். இதன்படி நேற்று அசைவ விருந்து படைக்க முடிவெடுத்தனர். இதையொட்டி, நேற்று மாரண்டஅள்ளியில் நடந்த வாரச்சந்தைக்கு படையெடுத்தனர். காலை 6 மணிக்கே ஆடுகளை வாங்க ஏராளமான பொதுமக்கள் குவிந்தனர். இதனால் சந்தை களைகட்டி காணப்பட்டது. நேற்று பல்வேறு பகுதியில் இருந்தும் ஆயிரக்கணக்கான ஆடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன.
பொதுமக்கள் போட்டிபோட்டு ஆடுகளை வாங்கினர். இதனால் ஆடுகளுக்கு கடும் கிராக்கி ஏற்பட்டது. ஒரு ஆடு ரூ5 ஆயிரம் முதல் ரூ8 ஆயிரம் வரை விலை போனது. விலையை பொருட்படுத்தாமல் மக்கள் ஆர்வத்துடன் வாங்கிச் சென்றனர். காலை 9 மணிக்குள் அனைத்து ஆடுகளும் விற்றுத் தீர்ந்தன. அதே நேரத்தில், ஆடு களை மொத்த விலையில் வாங்க டெம்போக்களுடன் வந்திருந்த வியாபாரிகள் பெருத்த ஏமாற்றமடைந்தனர். ஆடுகள் அதிக விலைக்கு விற்றதாலும், பொதுமக்கள் குவிந்ததாலும், வியாபாரிகளால் ஆடுகளை வாங்க முடியவில்லை. இதனால் அவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.
No comments:
Post a Comment