பதிவு செய்த நாள் : மார்ச் 26,2012,05:47 IST
தர்மபுரி: தர்மபுரி, மாவட்டத்தில், யுகாதி பண்டிகையொட்டி ஆடு விற்பனை சூடுபிடித்தது. பொதுமக்கள் போட்டு போட்டு வாங்கிச் சென்றதால், ஒரு ஆடு, 9,000 ரூபாய் வரை விற்பனையானது.
தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் யுகாதி பண்டிகை விமர்ச்சையாக கொண்டாடப்பட்டது. யுகாதி பண்டிகை கொண்டாட்டமான கடந்த 23ம் தேதி பொதுமக்கள் அசைவ சாப்பாடு தவிர்த்து வீடுகளில் சைவ சாப்பாடு சமைத்து சாப்பிட்டனர். மேலும், வீடுகளில் இனிப்பு பண்டங்கள் செய்து அக்கம், பக்கத்தினருக்கு வழங்கி மகிழ்ந்தனர். யுகாதி முடிந்த மூன்றாம் நாளான நேற்று பொதுமக்கள், வீடுகளில் ஆடுகளை வெட்டி சமைத்து உறவினர்களுக்கும், அக்கம் பக்கத்தினருக்கு வழங்கி மகிழ்ந்தனர்.
இதையொட்டி தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி வாரச்சந்தையில் ஆடு விற்பனை கனஜோராக நடந்தது. பல்வேறு பகுதியில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆடுகளை விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. காலை 6 மணி முதலே ஆடுகளை வாங்க ஏராளமான பொதுமக்கள் குவிந்தனர். பொதுமக்கள், போட்டி போட்டு ஆடுகளை வாங்கி சென்றதால் ஆடுகளுக்கு கடும் கிராக்கி ஏற்பட்டது. ஒரு ஆடு, 5,000 முதல் 8,000 ரூபாய் வரை விற்பனையானது.
சந்தை துவங்கி காலை 9 மணிக்குள் அனைத்து ஆடுகளும் விற்று தீர்ந்தது. இதேபோல், கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி, ராயக்கோட்டை, கெலமங்கம், ஓசூர், தேன்கனிக்கோட்டை, கிருஷ்ணகிரி மற்றும் மகராஜகடை உள்ளிட்ட பல்வேறு பகுதியிலும் நடந்த சந்தையில் ஆடுகளுக்கு கடும் கிராக்கி ஏற்பட்டதால், ஒரு ஆடு, 9,000 ரூபாய் வரை விற்பனையானது. இறைச்சி கடைகளிலும் ஆட்டு இறைச்சி வாங்குவதற்கு பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது.
No comments:
Post a Comment