Marandahalli Map

Saturday, May 31, 2014

உணவு தானிய உற்பத்தியில் இலக்கை விஞ்ச விவசாயிகளின் பங்கு முக்கியமானது

உணவு தானிய உற்பத்தியில் இலக்கை விஞ்ச விவசாயிகளின் பங்கு முக்கியமானது

First Published : 29 May 2014 04:04 AM IST
தருமபுரி மாவட்டத்தில் உணவு தானிய உற்பத்தியில் நிர்ணயிக்கப்பட்ட இலக்கைக் காட்டிலும் அதிகளவில் உற்பத்தியை எட்ட உறுதுணையாக இருந்த விவசாயிகளின் பங்கு முக்கியமானது என மாவட்ட ஆட்சியர் கே.விவேகானந்தன் குறிப்பிட்டார்.
தருமபுரி மாவட்ட ஆட்சியரகத்தில் விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு தலைமை வகித்த ஆட்சியர் கே.விவேகானந்தன் பேசியது:
தமிழகம் முழுவதிலும் கடந்தாண்டில் 110 லட்சம் மெட்ரிக் டன் உணவு தானிய உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இதில் தருமபுரி மாவட்டத்துக்கு இலக்காக நிர்ணயிக்கப்பட்ட 3.5 லட்சம் மெட்ரிக் டன்னை விட 4.25 லட்சம் மெட்ரிக் டன் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இதற்கு விவசாயிகளின் கருத்து, ஆலோசனையுடன் தமிழக முதல்வர் பிரத்யேகமாக பல திட்டங்களை வகுத்து கொடுத்தது தான் முக்கியக் காரணமாக அமைந்துள்ளது.
கடந்தாண்டு மாநிலம் முழுவதிலும் 19 விவசாயிகள் தேர்வு செய்யப்பட்டு விருது அளிக்கப்பட்டதில் தருமபுரி மாவட்ட விவசாயிகள் 13 பேருக்கு கிடைத்துள்ளது.
நிகழாண்டில் உணவு உற்பத்தியைப் பெருக்க தேவையான அனைத்து உதவிகளையும் அரசிடம் இருந்து பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கு விவசாயிகள் உறுதுணையாக இருக்க வேண்டும் என்றார் ஆட்சியர்.
தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் ஆர்.சின்னசாமி பேசியது:
கடந்த 3 ஆண்டுகளாக வறட்சி இருந்த நிலையில் தற்போது ஓரளவுக்கு மழை பெய்துள்ளது. கடந்த காலங்களில் சிறு, குறு விவசாயிகள் பயன்பெறும் வகையில் வேளாண்மை பொறியியல் துறை மூலம் நடைமுறையில் இருந்த இலவசமாக விளைநிலங்கள் உழவு செய்து தரும் திட்டத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும்.
மழையுடன், சூறைக் காற்றும் வீசியதால் மாவட்டத்தில் மா, மரவள்ளிக்கிழங்கு கடும் சேதமடைந்துள்ளது. குறிப்பாக தருமபுரி அருகே சோலைக்கொட்டாய் கிராமத்தில் பயிரிடப்பட்டுள்ள மரவள்ளிக்கிழங்கு முற்றிலும் சேதமடைந்து விட்டதால் அந்த விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் பெற்றுத் தர வேண்டும்.
தேசிய வங்கிகளில் விவசாயிகள் பெற்ற கடனுக்காக டிராக்டர் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்படுகிறது. விவசாயிகளுக்கு விரோதியாக வங்கிகள் செயல்படுவதை கட்டுக்குள் கொண்டு வர வேண்டும்.
தருமபுரி, மொரப்பூர், காரிமங்கலம் ஒன்றியங்கள் பயன்பெறும் வகையில் தும்பலஅள்ளி அணையில் இருந்து 58 கி.மீட்டர் தொலைவுக்கு கால்வாய் வெட்டி தண்ணீர் கொண்டு வர ரூ.80 கோடியில் திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டும் பட்ஜெட்டில் அறிவிக்கை வெளியிடப்படவில்லை. இந்தத் திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் அவர்.
மாவட்டத்தில் ஆண்டுதோறும் சராசரியை எட்டும் அளவிற்கு மழை பெய்வதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கப்பட்டும் வறட்சி நிலவுகிறது. எனவே, துல்லியமாக மழை அளவு கணக்கிடப்படுகிறதா என விவசாயி சுப்பிரமணியன் கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்து ஆட்சியர் கே.விவேகானந்தன் பேசியது:
சராசரியாக 853 மி.மீட்டர் மழை பெய்யும் மாவட்டத்தில் கடந்த 2012ஆம் ஆண்டில் 753 மி.மீட்டரும், கடந்தாண்டு (2013) 800 மி.மீட்டர் மழை பதிவாகியுள்ளன. மழை அளவைக் குறிக்க 7 இடங்களில் மழை மானியம் வைக்கப்பட்டுள்ளது. அனைத்து பகுதிகளிலும் பெய்யும் மழையை துல்லியமாகக் கணக்கிட கூடுதலாக 10 இடங்களில் மழை மானியம் வைக்க அரசுக்கு முன்மொழிவு அனுப்பப்பட்டுள்ளது என்றார் ஆட்சியர்.
கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் ப.ராமர், வேளாண்மை இணை இயக்குநர் கே.மோகன், ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) ஆர்.ஆர்.சுசீலா உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

No comments: