வெயில் உக்கிரம் அதிகரிப்பால் இளநீர் தட்டுப்பாடு : வெளி மாநில வியாபாரிகள் கொள்முதல்
பதிவு செய்த நாள் : பிப்ரவரி 29,2012,02:11 IST
தர்மபுரி : கோடைக்கு முன் வெயில் உக்கிரம் அடைந்திருப்பதை தொடர்ந்து தர்மபுரி மாவட்டத்தில் இளநீருககு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. முதல் தரமான இளநீர் வெளி மாநிலங்களுக்கு விற்பனைக்கு செல்வதால், வரும் நாட்களில் தட்டுப்பாடு அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் 0.38 மில்லியன் ஹெக்டேரில் தென்னை சாகுபடி நடந்து வருகிறது. குறிப்பாக கோவை, திருப்பூர், தஞ்சாவூர், திண்டுக்கல், கன்னியாகுமரி, வேலூர், நெல்லை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் மற்றும் மதுரை மாவட்டங்களில் அதிக அளவில் தென்னை சாகுபடி செய்யப்படுகிறது.
தென்னையை பொறுத்த வரையில் கற்பக விருச்சக மரமாகும். தென்னையில் இளநீர் முதல் மட்டை வரையில் விவசாயிகளுக்கு லாபத்தை கொடுக்கும் என்பதோடு, தென்னை மரங்களில் ஆயுட்காலமும் அதிகம் என்பதால் தென்னை விவசாயிகளுக்கு நஷ்டம் அதிகம் ஏற்படுவதில்லை.
வறட்சி, நோய் தாக்குதல் உள்ளிட்ட காரணங்களால் மட்டுமே நஷ்டம் ஏற்பட வாய்ப்பு உண்டு. மற்றப்படி தென்னை விவசாயத்தை பொறுத்த வரையில் விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் சராசரி லாபத்தை கொடுக்கும் பணப்பயிராக தென்னை சாகுபடி இருந்து வருகிறது.
ஆண்டுதோறும் கோடை காலங்களில் இளநீருக்கு அதிக அளவில் தர்மபுரி மாவட்டத்தில் இருந்து அறுவடை அதிகம் நடக்கும். ஆண்டு முழுவதும் இளநீர் விற்பனை இருந்த போதும், கோடை காலங்களில் வெளி மாநில வியாபாரிகள் வருகை அதிகம் இருப்பதால், தர்மபுரி மாவட்டத்தில் உற்பத்தியாகும் இளநீரில் 40 சதவீதம் வரையில் வெளி மாநிலங்களுக்கு விற்பனைக்கு செல்கிறது.
கோடை கால விற்பனையை குறி வைத்து தர்மபுரி மாவட்ட வியாபாரிகளும், வெளி மாநில வியாபாரிகளும், நேரடியாக தென்னை விவசாயிகளிடம் கொள்முதல் செய்வதோடு, முதல் தரமான இளநீர் அதிக அளவில் வெளி மாநில வியாபாரிகள் முன் கூட்டியே குத்தகை அடிப்படையில் தோட்டங்களை எடுத்து காய்களை பறித்து விற்பனைக்கு எடுத்து செல்வர்.
இதனால், கோடை காலங்களில் தர்மபுரி மாவட்டத்தில் இருந்து மாரண்டஹள்ளி, வெள்ளி சந்தை, பாலக்கோடு, அரசம்பட்டி ஆகிய ஊர்களில் இருந்து அதிக அளவில் தென்னை தோட்டங்களை வியாபாரிகள் குத்தகைக்கு எடுத்து வெளி மாநிலங்களுக்கு குறிப்பாக கர்நாடகா மாநிலம் பெங்களூருக்கு அதிக அளவில் இளநீர் விற்பனைக்கு அனுப்பி வருகின்றனர்.
உள்ளூர் வியாபாரிகள் சிறு விவசாயிகளிடம் இருந்து முன் பணம் கொடுத்து இளநீர் அறுவடை செய்து விற்பனை செய்கின்றனர். ஃபிப்ரவரி முதல் வாரத்தில் இருந்து கோடை வெயில் உக்கிரம் அடைந்திருப்பதை தொடர்ந்து இளநீர் விற்பனை சூடு பிடிக்க துவங்கியுள்ளது. டிசம்பர், ஜனவரி மாதங்களில் அதிகம் பனி காற்றின் தாக்கம் இருந்த போதும், இளநீர் 8 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.
வெயில் உக்கிரத்தை தொடர்ந்து இளநீர் 10 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. விற்பனை அதிகரிப்பு காரணமாக கடந்த நாட்களில் காலை முதல் மாலை வரையில் இளநீர் வியாபாரிகள் விற்பனை செய்த நிலை மாறி தற்போது, காலை நேரங்களில் மட்டுமே இளநீர் கிடைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
வரும் நாட்களில் இளநீருக்கு கூடுதல் தட்டுப்பாடு ஏற்படும் நிலையிருப்பதால், விலை ஏற்றத்துக்கும் வாய்ப்பு இருப்பதாக வியாபாரிகள் தெரிவித்தனர். தட்டுப்பாட்டை சமாளிக்க வியாபாரிகள் வீடுகளில் உள்ள தென்னை மரங்களிலும் காய்களை பறிக்க முன் பணம் கொடுத்து விற்பனை தட்டுப்பாட்டை போக்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ளனர்.
