Marandahalli Map

Sunday, November 20, 2011

வாட்டி எடுக்கும் வெயிலால் குடிநீர் தட்டுப்பாடு:கிராமப் பகுதிகளில் மக்கள் பெரும் அவதி

பதிவு செய்த நாள் : மே 31,2011,00:51 IST

தர்மபுரி:

தர்மபுரி மாவட்டத்தில் வாட்டி எடுக்கும் கோடை வெயில் காரணமாக கிராம பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால், கிராம பகுதி பெண்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். வெப்ப மண்டல பகுதியான தர்மபுரி மாவட்டத்தில் எந்தாண்டும் இல்லாத அளவுக்கு இந்தாண்டு கடந்த பிப்ரவரியில் இருந்து கோடை வெயில் வாட்டி எடுக்க துவங்கியது. தர்மபுரி நகராட்சி, பாலக்கோடு, மாரண்டஹள்ளி ஆகிய பகுதிகளுக்கு சின்னாறு அணைப்பகுதியில் இருந்து குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. தர்மபுரி நகராட்சியில் குடிநீர் விநியோகத்தை பொறுத்த வரையில் ஒரு நாள் விட்டு, ஒரு நாள் என்ற அடிப்படையில் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. கோடை காலங்களில் ஒரு நாள் விட்டு, ஒரு நாள் என்ற முறையில் குறைந்த நேரம் மட்டுமே குடிநீர் விநியோகம் செய்யப்படும். நகராட்சி சார்பில் மக்களுக்கு தினம் குடிநீர் வழங்க எடுக்கப்பட்ட முயற்சிகளும் கை கொடுக்கவில்லை. மாரண்டஹள்ளி பகுதியிலும் கோடை காலங்களில் ஐந்து நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் விநியோகம் செய்யும் நிலையும் கடந்த காலங்களில் இருந்து வந்தது. தற்போது, கோடை மழை பெய்ததால், சின்னாறு அணை பகுதியில் குடிநீருக்கு தேவையான தண்ணீர் ஓரளவுக்கு கை கொடுத்து வருகிறது. இருந்த போதும் தர்மபுரி நகரப்பகுதியில் பல வார்டுகளில் குடிநீர் சீரான விழுவதில்லை. உழவர் சந்தை அருகே கடந்த சில நாட்களுக்கு முன் ஏற்பட்ட மெயின் குழாய் பழுது காரணமாக பல வார்டுகளில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு நிலவி வந்தது. அக்னி நட்சத்திரம் துவங்கியது முதல் தர்மபுரி மாவட்டத்தில் கோடை வெயில் உக்கிரம் அடைந்துள்ளது. கோடை வெயில் காரணமாக குடிநீர் ஆதாரங்கள் அனைத்தும வறண்டுள்ளது. கிராம பஞ்சாயத்துக்களில் பெரும் அளவில் குடிநீர் விநியோகம் நிலத்தடி நீர் மட்டத்தை நம்பியுள்ளது. கிராமங்களில் ஆண்டு தோறும் கோடை காலங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுவது வாடிக்கை.
இந்தாண்டு கடுமையான வெயில் காரணமாக பல கிராங்களில் கடந்த இரு மாதங்களாக குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. கோடை வெயிலுக்கு இடையில் பெய்து வரும் கோடை மழையின் காரணமாக ஓரளவுக்கு குடிநீர் தட்டுப்பாடு சமாளிக்கப்பட்டாலும், தர்மபுரி யூனியனுக்கு உட்பட்ட இலக்கியம்பட்டி பஞ்சாயத்து உள்ளிட்ட பகுதிகளில் உப்பு நீர் மட்டுமே விநியோகம் செய்யப்படுகிறது. கிராம பகுதிகளில் நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டால் பெண்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருவதோடு, அந்தந்த பகுதிகளில் உள்ள திறந்த வெளி கிணறுகளில் இருந்து பெண்கள் பாதுகாப்பற்ற குடிநீரை எடுத்து பயன்படுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது. நகர மற்றும் கிராம பகுதிகளில் நிலவும் குடிநீர் தட்டுப்பாடு காரணமாக தனியார் குடிநீர் விநியோக முறைக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. நகரப்பகுதியில் வர்த்த நிறுவனங்கள் உள்ளிட்ட பகுதிகளில் லாரிகள், டிராக்டர்கள் மூலம் 300 ரூபாய் முதல் 500 ரூபாய்க்கு தனியார்கள் மூலம் குடிநீர் விநியோகம் நடந்து வருகிறது.

No comments: