தர்மபுரி:
பாலக்கோடு அடுத்த மாரண்டஹள்ளி பகுதியில்,
சமீப காலமாக கனகாம்பரம் பூ சாகுபடியில், விவசாயிகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். பெங்களூரு சந்தைகளில் நல்ல வரவேற்பு இருப்பதால், மலர் சாகுபடி பரப்பு இப்பகுதியில் அதிகரித்துள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் இறவை பாசன பகுதியிலும், நீர் சேமிப்பு அதிகம் உள்ள பகுதியில், சமீப காலமாக மலர் சாகுபடி அதிகம் நடந்து வருகிறது. பென்னாகரம், பாலக்கோடு ஆகிய பகுதியில் விவசாயிகள் செண்டு மல்லி, மல்லி, சேவல் கொண்டை, சாமந்தி, கனகாம்பரம் உள்ளிட்ட பூக்கள் சாகுபடி செய்து வருகின்றனர். பாலக்கோடு அடுத்த மாரண்டஹள்ளி பகுதியில் கனகாம்பர பூ சாகுபடி அதிகம் நடந்து வருகிறது. இங்கு சாகுபடி செய்யப்படும் கனகாம்பரம் பெங்களூரு மலர் சந்தையில் நல்ல வரவேற்பு இருப்பதால், இங்கிருந்து விவசாயிகள் பூக்களை பெங்களூரு மலர் சந்தைக்கு பஸ்கள் மூலம் அனுப்பி வருகின்றனர். பெங்களூரு பகுதியை சேர்ந்த பல வியாபாரிகள் நேரடியாக தோட்டங்களில் வந்து பூக்களை கொள்முதல் செய்கின்றனர். தொடர்ந்து முகூர்த்தம் மற்றும் பண்டிகை நாட்கள் வருவதால், தற்போது மலருக்கு கூடுதல் லாபம் கிடைத்து வருகிறது. கடந்த வாரம் கனகாம்பரம் பூ ஒரு கிலோவுக்கு, 300 முதல் 400 ரூபாய் வரை, பெங்களூரு சந்தையில் விலை கிடைத்தது. தற்போது, கனகாம்பர பூக்கள் உற்பத்தி சீசன் துவங்கியுள்ள நிலையில் மாரண்டஹள்ளி பகுதியில் பறிக்கப்படும் பூக்கள் உள்ளூர் தேவைக்கு போக ராயக்கோட்டை மற்றும் பெங்களூரு மலர் சந்தைக்கு விற்பனைக்கு செல்கிறது. வரும் நாட்களில் தொடர்ந்து பண்டிகை காலங்கள் இருப்பதால், கனகாம்பரம் பூக்களில் விலை பல மடங்கு உயர வாய்ப்பு இருப்பதாக விவசாயிகள் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.
No comments:
Post a Comment