தர்மபுரி: "பாலக்கோடு தாலுகா வழியாக செல்லும் உப்பம்பள்ளம் கானாற்றில் அணை கட்ட வேண்டும்' என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் மல்லையன், தலைவர் குமார், பொருளாளர் காளியப்பன் ஆகியோர் கலெக்டர் லில்லியிடம் கொடுத்துள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது: கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை தாலுகா தளி ஏரியின் கோடியில் துவங்கி தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு தாலுகாவில் சின்னாறு ஓடி ஒகேனக்கல்லில் சேர்கிறது. சின்னாற்றின் குறுக்கே பஞ்சப்பள்ளியில் அணை கட்டப்பட்டுள்ளது. சின்னாற்றின் குறுக்கே உள்ள அணைக்கட்டுகளில் இருந்து செல்லும் கால்வாய்கள் மூலம் நேரடியாக பாசனம் செய்யப்படுகிறது. மேலும் அணை கால்வாய் மூலம் ஏரிகளுக்கு நீர் கொண்டு செல்லப்பட்டு ஏரிபாசனம் நடந்து வருகிறது. இன்றைய நிலையில் சின்னாற்றின் நீர் தேக்கத்தில் மூலம் மட்டும் ஏரிகளை நிரப்ப முடியாத நிலையுள்ளது. சின்னாறு நீர் தேக்கத்துக்கு கீழே மாரண்டஹள்ளி அணைக்கட்டில் இருந்து செங்கன்பசவன்தலாவ் ஏரி கால்வாய் மூலம் சின்னாற்றின் நீரை கொண்டு செல்லப்படும் இடத்துக்கு கீழே சின்னாற்றுக்கு வந்து உப்பம்பள்ளம் கானாறு சேருகிறது. இது சின்னாறு துவங்கி வருவது போல் தேன்கனிக்கோட்டை தாலுகா பெட்டமுகிலாலம் வனப்பகுதியில் உருவாகி 10 கி.மீ., தூரத்துக்கு மேல் வந்து பாலக்கோடு தாலுகா சாஸ்திரமொட்லு கிராமத்தில் தரை வழியாக இறங்கி பெருங்காட்டுப்பள்ளம் மற்றும் துருகம்காட்டு பள்ளம் ஆகிய கானாறுகளுடன் இணைந்து உப்பம்பள்ளமாக பெருகி சின்னாற்றில் சேர்கிறது. குமாரசெட்டி ஏரியின் கோடியும், மாரண்டஹள்ளி அணைகட்டுக்கு கீழே சின்னாற்றில் சேர்கிறது. இதற்கு கீழ் பகுதியில் சின்னாற்றின் குறுக்கே உள்ள நல்லூர் கீழ் அணை மூலம் கோட்டூர் ஏரி மட்டும் நிரப்பும். கோட்டூர் ஏரியை கெசர்குளி நீர் தேக்க மூலமும் நிரப்பவும் வாய்ப்பு உள்ளது. உப்பம்பளளம் கானாற்றில் மழைக்கால வெள்ளத்தை பயன்படுத்த இந்த பகுதியில் அணை கட்ட வேண்டும். இந்த அணையில் இருந்து 200 அடி தூரத்தில் செல்லும் மாரண்டஹள்ளி அணை கட்டில் இருந்து செங்கன்பசவன்தலாவ் ஏரிக்கும் செல்லும் பொதுப்பணித்துறை கால்வாயுடன் இணைப்பு கால்வாய் மட்டும் அமைத்தால், மழைக்காலத்தில் உப்பம்பள்ளம் வெள்ளத்தை முழுமையாக விவசாய பணிகளுக்கு பயன்படுத்தலாம். மேலும் கெசர்குளி அணைக்கும் கால்வாய் பிரித்து நீர் கொண்டு செல்லலாம். சின்னாறும், உப்பம்பள்ளம் ஆறும் பருவ மழை தவறும் பட்சத்தில் தென்பெண்ணையாற்றில் இருந்து நான்கு இடங்களில் கால்வாய் அமைத்து தர்மபுரி மாவட்டத்துக்கு அந்த நீரை கொண்டு வரலாம். ஓசூர் தாலுகா கெலவரப்பள்ளி அணைப்பகுதியில் இருந்து சின்னாறு நீர் தேக்கத்துக்கு கால்வாய் அமைக்க வேண்டும். ராயக்கோட்டைக்கு மேற்கே உள்ள லிங்கனஹள்ளி கடமல்பட்டியில் இருந்து நல்லூர் வழியாக காட்டுசூடனூதரில் உள்ள தூள்செட்டி ஏரிக்கு கால்வாய் அமைக்க வேண்டும். லிங்கனம்பட்டி ஏரியில் இருந்து ராயக்கோட்டை செதில்பட்டி ஏரி வரை வருவதை ராயக்கோட்டைக்கு தெற்கே உடையாண்டஹள்ளி ஏரிக்கு இணைப்பு கால்வாய் அமைத்து அங்கிருந்து கும்மனூர் வழியாக மாரண்டஹள்ளிக்கு வடக்கேயும், வட கிழக்கேயும் உள்ள வறண்ட பகுதிகளுக்கு ஒரு புறமும் உடையாண்டஹள்ளியில் இருந்து கிழக்கே சின்னாகனஹள்ளி ஏரிக்கு இணைப்பு கால்வாய் அமைத்து குளிக்காடு ஏரி சொக்கம்பட்டி ஏரி, பட்டி ஏரி ஆகியவற்றுக்கு இணைப்பு கால்வாய் அமைக்க வேண்டும். கிருஷ்ணகிரி மாவட்டம் இட்டிக்கல் அகரம் வழியாக மோரமடுகு, சாப்பர்த்தி, பனக்கமுட்லு, குட்டிகானூர், குட்டப்பட்டி வழியாக மலத்தம்பட்டிபுதூர், கரடியூர் தும்பலஹள்ளி அணை வரை இணைப்பு கால்வாய் அமைக்கலாம். இந்த நீர் பாசன திட்டங்கள் மூலம் தர்மபுரி மற்றும் அரூர் தாலுகாவில் உள்ள நீர் ஆதாரங்களும் பயன்பெறும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment