தர்மபுரி: கருந்தலைப் புழு தாக்குதல் காரணமாக, தென்னை மரங்கள் பாதிக்கப்பட்டு வருவதால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
தர்மபுரி மாவட்டம் விவசாயத்தை பிரதானமாக கொண்ட மாவட்டம் ஆகும். மா, கரும்பு, மஞ்சள், ஆகியவற்றுக்கு, அடுத்த படியாக, மாவட்டத்தில் பாலக்கோடு, மாரண்டஹள்ளி, காரிமங்கலம், பாப்பிரெட்டிப்பட்டி உட்பட, 9,700 ஹெக்டேரில், தென்னை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. மாவட்டத்தில் போதிய பருவமழை இல்லாததால், தென்னை விவசாயிகள் பாதிக்கப்பட்டு வந்தனர்.
இந்நிலையில், விவசாயிகளை, மேலும், கவலை அடைய செய்யும் வகையில், மாவட்டம் முழுவதும் பரவலாக கடந்த, சில மாதங்களாக, தென்னை மரங்களில், கருந்தலைப் புழுக்கள் தாக்குதல் அதிகரித்துள்ளது. இதனால், தென்னங்கீற்றுகள் பசுமை இழந்து காணப்படுவதுடன், தென்னை மரம் முற்றிலும் பாதிக்கப்பட்டு வருகிறது. மேலும், அருகில் உள்ள மரங்களுக்கும், கருந்தலைப் புழு தாக்குதல் பரவுவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
வேளாண்மைத்துறையினர் கூறியதாவது:
கருந்தலைப் புழுக்கள் தென்னங்கீற்றுகளில், அடிபாகத்தில், தங்கி, பச்சையத்தை சுரண்டி, கீற்றுக்களின், வளர்ச்சியை பாதிக்கும். கருந்தலைப் புழுத்தாக்குதல், மார்ச் மாதம் முதல் மே மாதம் கோடை காலங்களில், அதிகளவில் இருக்கும். கருந்தலைப் புழுவின் தாய், அந்துப்பூச்சி, சிறியதாகவும், சாம்பல் நிறத்துடன் காணப்படும். இப்பூச்சிகள், தென்னங்கீற்றின் அடிப்பாகத்தில், பச்சையம் சுரண்டப்பட்ட பகுதிக்கு அருகில், முட்டைகளை இடுகின்றன.
சராசரி புழுப்பருவம், 42 நாட்கள் ஆகும். 12 நாட்களில், கூட்டுகுழு பருவத்தில் இருந்து வெளிவரும் அந்துப்பூச்சிகள், தங்களது இனசேர்க்கையை மேற்கொண்டு, ஒரு புழு தென்னங்கீற்றுகளில், 135 முட்டைகள் வரை இடுகின்றன. தாய் புழுக்கள், 60 நாட்களில் இறந்து விடும். எனவே, அதன் பருவத்துக்கு ஏற்ப கருந்தலைப் புழுக்களை கட்டுப்படுத்த வேண்டும். கருந்தலைப் புழு தாக்கப்பட்ட, கீழ் அடுக்கில் உள்ள தென்னங்கீற்றுக்களை வெட்டி எரித்து விடவேண்டும்.
கருந்தலைப் புழு தாக்குதல் அதிகமாக இருக்கும் போது, ஒரு லிட்டர் தண்ணீரில், இரண்டு மில்லி டைகுளோர்வாஸ் அல்லது, ஐந்து மில்லி மாலத்தியான் மருந்தினை, ஒரு மில்லி ஒட்டும் திரவத்துடன் கலந்து தெளிக்க வேண்டும். கருந்தலைப் புழுக்கள், மிக அதிகளவில் தாக்கப்பட்ட மரங்களின் நன்கு வளர்ந்த இளஞ்சிவப்பு நிறமுள்ள வேரினை சாய்வாக வெட்டிய பின், துளைகள் இல்லாத பாலிதீன் பையில், 10 மில்லி தண்ணீருடன், 10 மில்லி மானோகுரோடோபாஸ் மருந்தை கலந்து வேரில் கட்டிவிட வேண்டும்.
மேலும், 25 நாட்களுக்கு பின், கருந்தலைப் புழுவின், புழு பருவத்தை கட்டுப்படுத்த, ஒரு மரத்துக்கு பிரகானிட், 20, பெத்லிட், பத்து ஒட்டுண்ணிகளை விடவேண்டும். கூட்டுபுழுவை கட்டுப்படுத்த மரம், ஒன்றுக்கு, 20 என்ற எண்ணிக்கையில், சால்சிட் அல்லது யுலோபிட் ஒட்டுண்ணிகளை விடவேண்டும். 15 நாட்களுக்கு, ஒரு முறை வீதம், ஐந்து அல்லது, ஆறு முறை ஒட்டுண்ணிகளை, தென்னை மரங்களில் விடுவதன் மூலம் கருந்தலைப் புழுக்களை கட்டுபடுத்தலாம்.
தற்போது, மாரண்டஹள்ளி பகுதியில், தென்னையில் கருந்தலைப் புழுக்கள் தாக்கம் அதிகளவில் உள்ளது. அங்கு, அட்மா திட்டத்தின் கீழ், நான்கு லட்ச ரூபாய் மதிப்பில், விவசாயிகளுக்கு, கருந்தலைப் புழு தாக்குதலை கட்டுப்படுத்த மருந்துக்கள் மற்றும் ஒட்டுண்ணிகள் வழங்கப்பட்டு வருகிறது, என்றார்.